Saturday, September 14, 2013

RAYMOND..

Raymond என் கூட பேசிக்கிட்டு இருந்தான்.

ம்மா 
(பக்கத்துவீடு) முனிசா  அக்கா LKG படிக்காங்க.அனுசா அக்கா UKG.
நானு  AKG, அப்புறம் BKG, CKG,DKG,....(அதுக்கு பிறகு Z வரைக்கும் போச்சு.)

crayons, sketch, வாங்கிக் கொடுத்துருக்கு.
நோட் புக் தவிர்த்து எல்லாப் பக்கமும் எழுதுறாரு.எதையும் தடுக்கிறதில்ல.
sketch - i வாயில் வைக்கும் போதுதான்  பதட்டமான கோபம்.தங்கம்(கோபமான தங்கம்) பேப்பர் , தரை, கதவு, சுவரு -இதுலமட்டும்தான் எழுதணும்.வாயில் வைக்க கூடாதுன்னு சொல்லிட்டே ஸ்கெட்ச் - i பிடிங்கினேன்.
அப்போ நாக்கில் எழுதக் கூடாதான்னு கேக்குறான்.

இந்த உணவை தந்த இறைவனுக்கு நன்றி 
இப்படி சொல்லிட்டுதான் சாப்பிடுவான்.மழலையா கேக்கும் போதும்,அவன் சொல்லிச் திரும்ப சொல்லும் போதும் சந்தோசம்.இப்போ கொஞ்சநாளா  ,திருக்குறள் சொல்லுறான்.அந்தக் குறள் பகுத்துண்டு ன்னு  துவங்கும்.மீதி 6 வார்த்தைகளும் ஒன்னும் புரியாது.மாப்பிள்ள நீ சொல்லுறது கலைஞர்க்கே புரியாதுடான்னு சொல்லிக் கொண்டே தம்பியும் குறள் சொல்லுறான்.

yellow கலர் வாத்து,green கலர் ஹெலிகாப்ட்டர் ,blue கலர் fish பொம்மை வாங்கி கொடுத்ததில் ,fish தான் ரெம்ப பிடிச்சுருக்கு போல  தூங்கும் போதும் அவன் நெஞ்சில் கிடக்கிறது அந்த நீல மீன் .சேட்டை பண்ணினால் குழம்பு வச்சுடுவேன் , குழாய திறந்து விட்டுட்டு நீந்து மீனு,-இப்படில்லாம் மீன் கூட பேசிட்டே இருக்கான் .வாங்கும்போது கூட இத்தனை அழகாய் இல்லை இந்த மீன்.இதுதான் வேணும்னு அவன் தேர்ந்து கொள்வதில் ஆச்சர்யமே மிஞ்சுகிறது எனக்கு.

குளிர்பானங்கள் (மாசா ,கோக்,பெப்ஸி,)இதெல்லாம் நாங்க tonic -ன்னு சொல்லி வச்சுருக்கோம் .கால்வலி ,காது வலி,க்குதான் இதெல்லாம் குடிக்கணும்ன்னு சொல்லி வச்சுருக்கு,but ,தம்பி taste காண்பிச்சாச்சு போல.ம்மா ,ரெம்ப கால் வலிக்கு மாசா டானிக் வாங்கிட்டு வாங்கன்னு போன்ல கேக்குறான்.

எல்லாமே அழகு .


Tuesday, September 10, 2013

!!..

0

எல்லாமும் செலவழிந்தும் 
மீதமாய்  இருக்கிறாய்
குறைவே இல்லாக் குறை நீ 

0

உன்னிடம்
எனது பதில்களெல்லாம் 
தெரியாது என்பதே

100% மதிப்பெண்கள் 
தருகிறாய்
உன்னைப் போல் 
நீ மட்டுமே

0

Tuesday, August 13, 2013

விபத்து

11.08.13 அன்றைக்கு காலையில மதுரை ஒத்தக்கடை தாண்டி  ஒரு கார் மற்றும் பஸ் நேருக்கு  நேராய் மோதிய விபத்தில் தொழிலதிபர் மனைவி சிறுமி பலி - ன்னு ஒரு accident news.அந்த செய்தியை  வழக்கம்  போல ஐயோ பாவம்னு மட்டும்  நினச்சுட்டு கடந்து போய் விட முடியல.அவர் எங்க ஊரு , எங்க பாட்டி வீட்டுத் தெரு. 

அவுங்க வீட்டுக்கு மட்டுமில்ல ,எங்க ஊருக்கே துஷ்ட்டி போலத்தான் இருந்தது.

அவர் பெரிய இடத்து மனுசன்,நிறைய தொழில்கள் இருக்கு.தேவை இல்லாத எதுவும் அவரைப் பத்திக் கேள்விப்படல.ஊருக்குள்ள சில முக்கியமான பொறுப்புகள் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கு.அவ்வளோதான் எனக்குத் தெரியும். 

நான் படிச்ச ஸ்கூல்க்கு அவர்தான் correspondent .இப்போவரைக்கும் கூட.நான் 12th படிக்கும் போது சினிமா தியேட்டரில் அவர்  பார்த்துட்டார்.வேகமா அப்பா பின்னாடி ஒதுங்கின என்னை பார்த்துட்டு  இனிமேல் உன்ன இங்க பார்த்தேன்னா பள்ளிக் கூடத்துக்குள்ள விடவேணாம்னு சொல்லிடுவேன் பாப்பான்னு சொல்லிட்டு  அப்பாக்கும் திட்டு.

நான் பள்ளிகூடத்தில்தான் அதிகமா பார்த்திருக்கேன்.படிக்கும் போது தினமும் அவரை பார்த்துடுவேன்.சிரித்த முகம்தான் பெரும்பாலும்.

parents meeting வந்தால் எங்களுக்கெல்லாம் முந்தி வந்து உக்காந்து ,mark register - ஐ புரட்டிக் கொண்டிருப்பார்.இந்த ஆளோட முடியலடி, எங்க அப்பா கூட இப்படில்லாம் advice பண்ணமாட்டாரு, பெரிய கலர் காமராசர்ன்னு நினைப்பு இப்படில்லாம்  கமெண்ட்ஸ் கிசுகிசுக்கும்.அவர் எழுந்ததும் ஒரு அமைதி.அவர் பேசும்போது மரகிளைகளில் இருக்கும் காக்கா குருவி சத்தம் மட்டும் extra கேக்கும்.தியேட்டர்ல  பார்த்ததை சொல்லி திட்டிடக் கூடாதுன்னு பயந்து பயந்து உக்கார்ந்திருந்ததெல்லாம் ஒரு கதை.

ராஜபாளையம்  தாண்டி கொண்டு வந்துட்டாங்களாம் .
அவருக்கும் அவர் மனைவிக்கும் பிறந்தநாளும் ஒரே date தானாம் ,இன்னைக்குதான் அவர் அப்பா நினைவு நாளும் ..நேத்து கிளம்பும் போது ஸ்கூல் - ல இருக்கும் அப்பா  சிலையை கழுவி ரோஜாப்பூ மாலை போட சொன்னாராம்..இப்படியே ஏதேதோ சொல்ல அமைதியா கேட்டுகிட்டே இருந்தேன்..but 
 car accident ஆகும்முன்னாடி அவர்  செய்த 4 போன் calls - la ஒரு call  ஸ்கூல் சம்பந்தப்பட்டதுன்னு சொல்லிக் கேக்கும்போது  வெகு சாதாரணமாக துளிக் கண்ணீர் வழிந்து போனது. 

சாயங்காலம் 7.30 pm மூன்று body - யும் கொண்டு வந்தாங்க.
அந்த பெரிய்ய்ய வீட்டில் 3 உடல்களும் வரிசையாய் கிடத்தியிருந்தது தாங்க முடியாத அழுத்தத்தையே கொடுத்தது.

சிதைந்து இரண்டு முகங்களுக்கிடையே 
தேவதை துயிலுவதைப் போல் இருந்த அந்த ஏழு வயது சிறுமியின் முகம் மறக்க சில வருஷங்களாகும்.
உன்னோட அண்ணன் அப்போல்லோ - ல இருக்கானாமே.அப்பா அம்மா வை சென்னை ஏர்போர்ட் ல receive பண்ணவாடி தங்கம் போனன்னு மிக மெதுவாக சொல்லி மனங்கசந்த ஒரு சொந்தத்தை கைத்தாங்கலாக ஒருவர் அழைத்துப் போனார்.   


கூக்குரலில்லை அலறலில்லை ஒரே அமைதி.
ஊரே கூடியிருந்தது ஒரு தெருக்குள்.
நிசப்த்தத்தின் கனம் புரிந்தது.

காலைல அடக்கம்.பேசிக்கொண்டார்கள்.

மயானத்தை முழுவதும் சமதளம் ஆக்கி ,நிறையா மண்ணடித்து உயர்த்தியிருக்காங்கன்னு என்னோட அப்பாட்ட ஒருத்தர் சொல்லிட்டுஇருந்தாரு.கடைசியா மனுஷன் சுடுகாட்டையும் சுத்தம் செய்துட்டுதான் போறாரு போலன்னு நினைச்சுக்கிட்டேன்.

விளையாண்டு கொண்டிருந்த என்னோட மகன் 
அவனாவே வந்து பேசுறான்.(கடந்த கொஞ்ச நேரமா அவன்ட்ட எதுவுமே பேசலங்கிறது  உணர்ந்து அவனைக் கவனிச்சேன்)
ம்மா .. நடந்துதான் போகணும் 
ஓடவே கூடாது  காரு வேமா ஓடுச்சா அதான் புண்ணு வந்துச்சு 
maymond லாம் நடக்கத்தான் செய்வான் 
அப்படி சொல்லிக் கொண்டே மெது மெதுவாய் நடந்து காண்பித்தான்.

என்னோட மகனுக்கு எதுவோ புரிந்திருக்குது.

Monday, July 22, 2013

raymond..

காக்கொரோச்சு  
கொசுமுத்தை

இதெல்லாம் இப்போ கோவத்தில்  இருந்தால் என்னோட மகன் திட்டும்  வார்த்தைகள்.அவனை வேணும்னே கோவப்படுத்தி அதிகமா என்னோட தம்பிதான் அந்த திட்டைலாம் வாங்கிப்பான்.

அதிகமா பயப்படும் விஷயம் ஷாம்பூ பாத்.daily காலைலே கேக்க ஆரம்பிச்சுடுவான்.தலைக்கு குளிக்க வேணாம்.தலைக்கு குளிக்க வேணாம்.இந்த ஸ்லோகம் ஒருமணி நேரத்துக்கும் மேல தொடர்ந்து ..... கேட்டுட்டே இருக்கலாம்.எதுக்கும் divert ஆகாமல்  சொல்லீட்டு இருப்பான்.ஒருநாள் நானும் தம்பியும் சேர்ந்து raymond ஐ சும்மா விரட்டி விரட்டி தலைக்கு குளிக்க வச்சுட்டோம்.அழுதுட்டே இருந்தான்.இனி அடுத்தவாரம் தான் ஷாம்பூ பாத்ன்னு அவனுக்கு சொன்னேன்.உடனே சமாதானம் ஆயுட்டான்.அடுத்த நாள் காலைல raymond வழக்கம் போல சொல்லுரதை சொல்லவேயில.நானும் அதை கவனிக்கல.ஏதோ தம்பிக்கும் அவனுக்கும் வாக்குவாதம்.குளிக்கிரத தம்பி பேச்சுவாக்கில் இழுத்துட்டான்.raymond வேகமா அம்மா சொன்னாங்க இனி அடுத்த வாரம்தான் ஷாம்பூ பாத்ன்னு பதில் சொல்லியாச்சு.தம்பி  உடனே உனக்குத் தெரியதா raymond இன்னைக்குத்தான் அடுத்த வாரம்னு  சொல்லியதும் என்னட்ட வந்து அம்மா இன்னைக்கம்மா "அடுத்தவாரம்"-ன்னு கேட்ட raymond முகத்தில் பயம் கலந்த innocence.

கொஞ்சம்   இறங்கி  மடங்கி கெஞ்சுவதெல்லாம் school கிளம்பும் போது மட்டும்தான்.மத்தபடில்லாம் , அவன் நம்பள கண்டுக்கவே மாட்டன். எதாவது சேட்டைகொஞ்சம் அதிகம் ஆச்சுன்னா...என்னோட தம்பி அக்கா அவன கிளப்பு,சாந்தா டீச்சர்ட்ட விட்டுடலாம்னு தான் சொல்லுவான்.ஒரு நாள் தம்பி அப்படி சொல்லும் போது நான் உடனே ஐயையோ.. உன்னால முடியாதே ,அவன் அப்போவே தூங்கிட்டான்னு சொன்னதும் வேகமா  வேலைய (சேட்டையை)விட்டுட்டு  கண்ணை இருக்க மூடி படுத்துக்கிட்டான்.அப்படியா அப்போ கொறட்டை சத்தம் காணும்னு தம்பி சொன்னதும்
raymond கொர்ர்ர் கொர்ர்ர் கொர்ர்ர் ன்னு சொல்லிட்டே படுத்திருந்தான்.

நல்லாயிருந்தது.
:)

Tuesday, May 28, 2013

நானும் மகனும்..

என்னுடைய மகன் raymond.இரண்டரை வயது.
நிறைய பேசுறான்.கேட்டுட்டே இருக்கலாம்.

மதியம் அவனை தூங்க வச்சிட்டு சில வேலைகள் செய்யனும்னு எனக்கு plan.
பேசிட்டே இருந்தான்...கையில் விசில் வச்சு ஊதிட்டும்  இருந்தான்.முதல்ல விசிலை வாங்கினால்தான் தூங்கவைக்க முடியும்னு பேசிட்டே,வேகமா பிடுங்கி side-ல வச்சுட்டு காக்கா தூக்கிட்டு போயுடுச்சுன்னு சொன்னேன்.
எதுக்கும்மா எப்பவுமே காக்காதான் தூக்கிட்டு போகுது?கொக்கு குருவிலாம் தூக்கிட்டு போகாதான்னு கேட்டான்.கொஞ்சநேரத்தில் தூங்கிட்டான்.evening எழுந்து அங்கேயே கிடந்த விசிலை எடுத்துட்டு  தூக்கக் கலக்கதோடே..
எப்போ காக்கா வந்து விசிலை போட்டுசுன்னு வேற கேள்வி.

:)


நைட் தோசை ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தேன்.தெருவுல விளையாண்டுகிட்டேதான் சாபிடுவான்.அங்கும் இங்குமா நடந்துட்டே கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கணும்.அன்றைக்கு அவனை ஏமாத்தி கொடுக்கத் தெரியாமல் முழிச்சுட்டு இருந்தேன்.மூணு குட்டி உருண்டையாய் தட்டில் வைத்து இது அம்மா வாய்,இது அப்பா வாய்,இது raymond வாய் ன்னு நான் சொல்லிக்கொண்டே பிடித்து வைப்பதை சிரிச்சுட்டே பார்த்துட்டு இருந்தான்.இதுவரைக்கும் அப்படி சொல்லி ஊட்டினதே இல்ல.அவனுக்கு புதுசா இருந்தது அவன் கண்களில் தெரிந்தது.ok..,கொடுத்துடலாம்னு நம்பிக்கை வந்துச்சு.maymond  வாய் maymond -க்கு ,அம்மா வாய் அம்மாக்கு,அப்பா வாய் அப்பாக்கு ன்னு சொல்லீட்டு sir   ஒரு உருண்டை தவிர வேற சாப்பிடவேயில்ல.நானும் கட்டாயப்படுத்தல.


இப்படி அவன் நிறைய பேசுறான்...
அழகாயிருக்கு.

Tuesday, May 7, 2013

கேட்டவை -1-

கொஞ்சநாளுக்கு முன்னாடி வலை பதிவாளர் நேசமித்திரன் கூட பேசும் வாய்ப்பு கிடைத்தது.கவிதை எழுதுவது குறித்த உரையாடல் அது.மான்கொம்பு-இலையுதிகாலம்,நொச்சியிலை-மயில்பாதம்-நிலாமுகம் இப்படி கவிதைகள் குறித்தும் ,கவிதை எழுதும் விதம் பற்றியும் பேசியபிறகு நான் எதை எழுதினாலும் அதை நானே பொருட்படுத்திக் கொள்ளாத ஒரு மன நிலை எனக்கு.

அப்புறம் சில நாள் கழித்து புதிய வரிகள் எனக்குள் அதை எழுதாமல் அதை அப்படியே தூக்கி அப்புறமாய் வைத்தும் அது என்னை தொந்தரவு செய்தபடியே இருந்தது.

பிறகு மித்திரன் சார்க்கு எனக்கு தோன்றியதை நான் எழுதி அனுபுறேன் நீங்க அதற்கு வடிவம் கொடுங்கன்னு சொல்லி ஒரு மெயில் செய்தேன். 



விரித்து வைத்த நீல வரைபடத்தாளென வானம் 
எதற்காக நிர்ணயிக்கப்பட்ட 
புள்ளிகளோ அவை.
அதை இணைத்துவைத்த 
பென்சில்கரங்கள் யாருடையவையோ
x அச்சு 
y அச்சு 
தேடிய என் பயணம் நீள்கிறது 
தொடரும் நீள்மலைத்தொடர்களுடன் 

இதுதான் என்னுடைய கிறுக்கல் 

எதற்கோ நிர்ணயிக்கப்பட்ட 
புள்ளிகளை இணைத்துத் தோற்கும் 
பென்சில்கரங்கள் யாருடையவை 
நீல வரைபடதாளாய் படபடக்கிறது வானம் 

என் பயணம் நீள்கிறது 
தொடரும் நீள்மலைத்தொடர்களுடன் 

அரைவட்டமடித்து கிளையமர்கிறது 
ஒரு இராப் பாடி பறவை 
அதனிடம் கேட்க சில அட்ச தீர்க்க ரேகைகளின் 
கதைகளிருகின்றன 

இப்படிதான் அதை மித்திரன் சார்  திருப்பி கொடுத்திருந்தாங்க

நல்லாயிருந்தது.