Tuesday, May 25, 2010

..!!..

ஊறி நனைந்தது மார்.
எங்கிருந்தோ வரும்
குழந்தையின் அழுகுரல்..!!

Saturday, May 15, 2010

எண்ணப்பறவை உதிர்த்த இறகுகள்..

-1-
பிடித்த வசனம்
தொடங்கயிருக்கும் வினாடிகளில்..
ஆரம்பித்தது விளம்பர இடைவேளை !!

-2-
நெரிசல்கள் இல்லா
அறையின் சுவற்றில்..
முட்டி மோதுகிறது தும்பி !!

-3-
குளித்துவிட்டு சிறகுலர்த்துகின்றன
சிட்டுக்கள்..
குடிப்பதற்கென வைக்கப்பட்ட
அகன்றவாய் பாத்திரத்தின்
விளிம்பில் நின்று !!

-4-
அழைப்பிதழ் கொடுத்து
வாராதே என்றாள்
காதலி !!

-5-
இருபுறமுமாய் கால்களிட்டு
நெஞ்சில் உறங்கும் குழந்தையென..
ஜன்னல் கம்பிகளில்
வாழ்த்தட்டைகள் !!

-6-
"லயிலு லோடு"
என்ற மழலை மொழி..
தண்டவாளத்திற்கான
குறுங்கவிதையானது !!

Friday, May 7, 2010

மழை நாளில்...

வெளியே மழை.
உள்ளே நான்.
இருவருக்குமிடையே
சிக்கித் தவிப்பதாய் உணர்த்தின..,
மூடாக்கதவருகே ஒ(ப)துங்கிய
ஈர ஜோடிச் சிட்டுக்குருவிகள்.

நெல்மணிகள் எடுக்கத்தான்
எத்தனித்தேன் - அவைகளோ
பறக்க எத்தனிக்கின்றன.
அமைதியாகின்றேன்.

விருந்தாளிகளைக்
கவனிக்காத
எனக்கு மட்டும் எதற்கு?..
கோப்பையில் தேநீர்
ஆறிப்போக விட்டுவிட்டேன்.

நிர்ச்சலனமாய்
நாங்கள்..
சலசலக்கிறது
மழை..

மூவருமாய் மழை
பார்த்தோம்.
இடையிடையே..,
நான் அவற்றையும்..
அவை என்னையும்..

இன்னுமாய்..,
ஒன்றையொன்று
அவை பார்த்துக்கொண்டது,
மழையை விட அழகாயிருந்தது எனக்கு..!!