Wednesday, November 14, 2012

..??..

ஒரு புறமுமாய் நீயும் 
மறுபுறமாய் நானும்   
கவனமாகக் கடித்த
நெல்லிக்கனியின் விளிம்புகளில் 
விரைவாய் விரைந்து 
நெருங்குகிறது நம் எச்சில்.

Monday, September 24, 2012

..??..

மாதத்தின் 
இறுதி இரவு.

தொடங்கியிருந்தோம் 

நாளை
வீட்டு வாடகை 
கரண்ட் பில்
வாட்டர் பில்
மளிகை பொருள்
அம்மாக்கு பணம் அனுப்பனும் 

இன்னும் 
இன்னும்
இன்னுமென 

மூச்சுவாங்கியது 
இருவரோடுங்கூட 
பிளாஸ்டிக்  உறைக்குள்
நீந்தும் வால் அணுக்களுக்கும்


Wednesday, September 5, 2012

ஆசிரியர் தினம்..

காலைலேயே அப்பத்தாக்கு வாழ்த்து சொல்லியாச்சு.
சொல்லியதில் எவ்வளவு சந்தோசம் அந்த 85 வயது பழமைக்கு.

தன் 16 வயதில் தொடங்கிய பணி இன்னுமாய் 
தொடர்ந்து கொண்டிருக்கு.தன்னிடம் படித்தவர்களின் 
பேரன் பேத்திக்கெல்லாம் அ எழுத சொல்லி கொடுத்துட்டு இருக்காங்க.
அப்பத்தா நல்லாசிரியர் விருது வாங்கியதில் 
 கர்வம் கொஞ்சம் உண்டு,அப்பதாக்கு இல்லை எனக்கு.

பிஞ்சு மழழையின் மனங்களுக்குள் 
எழுத்துக்களை அறிவிக்கும் அற்புதமான 
திறமைக்கு  நூறு வணக்கங்கள் சொல்லியே தீரவேண்டும்.
எனக்கும் எழுதப் படிக்க சொல்லித் தந்தவுங்க அப்பத்தா தான்.

அப்பத்தா டியூஷன் நேரங்களில்  நிறைய கவனித்துக் கொண்டே இருக்கலாம்.நிறைய ஒழுங்குகள் இருக்கும்.
சிலேட்டில் எல்லாருக்கும் கோடு போட்டு கொடுப்பாங்க.எல்லா பிள்ளைகளின் எழுத்தும் அழகாத்தான் இருக்கும்.எப்படி அப்பத்தா ன்னு கேட்டால் சிரிச்சு வைப்பாங்க.உச்சரிப்புகளை திருத்தும் விதம் எல்லாமே நல்லாயிருக்கும்.

அப்பத்தா குழந்தைங்களுக்கு  கொடுக்கும் தண்டனைகள் எல்லாம் எளிமையா இருக்கும் 
கால் கட்டை விரலை பிடித்துக் கொண்டு உக்காந்திருக்க வேணும்.
சிலேட்டை தலையில் சுமந்து உக்காந்திருக்க வேண்டும்.
அ ஆ  வரிசை சொல்லியபடியே உக்கி போடணும்.
க கா வரிசை சொல்லியபடி உக்கி போட்டால் பெரிய தண்டனை.
அப்பத்தாவைக் கம்புடன் பார்த்ததே இல்லை.

முதல் வகுப்பில் கூட சேராத குட்டீஸ் லாம் இருப்பாங்க.
அவுங்கல்லாம் திருக்குறள் சொல்லுவாங்க.
20 முதல் 30 வரைலாம் சொல்லீட்டு இருப்பாங்க.
மழழை மொழியில் கேக்கும் போது அத்தனை அழகும் பிரமிப்புமாய் இருக்கும்.

கதை பாட்டு கவிதை கொஞ்சம் பாடம் ன்னு நகரும் அப்பத்தாவின்  டியூஷன் டைம்ஸ் ஒரு வரம்தான்.

வெள்ளிக் கிழமைகளில் மட்டும் டியூஷன் முடியும் போது எல்லாருக்கும் ஆரஞ்சு மிட்டாய்.
நன்றி டீச்சர் ..நன்றி டீச்சர் ..ன்னு சொல்லிய படி வாங்கும் பிள்ளைகளை பார்க்கும் போது எத்தனை சந்தோசம்.உனக்கு என்ன கலர் உனக்கு என்ன கலருன்னு மாறி மாறி பிள்ளைகள்  கேட்டுக்குவாங்க.நானும் அந்த வரிசைகளில் பயணித்ததுண்டு.

அப்பத்தா அதிகாலையிலேயே எழும்பிடுவாங்க.5 மணிகெல்லாம் டியூஷன் ஆரம்பிச்சுடும்.
எதில் உக்காந்தாலும் சாய்ந்து உக்காருவதேயில்லை.
அப்பத்தாவை பொக்கை வாயுடன் பார்த்ததேயில்ல.
இப்போ வரைக்கும் தன்னுடைய எல்லா வேலைகளையும் தானே பத்துகிடுறாங்க.
அவுங்களுக்குன்னு ஒரு பிடிவாதமான routine இருக்கும்.

என் மரண செய்தி இந்த குழந்தைகளின் உளரும் மொழியில்தான் இந்த உலகுக்குத் தெரியப்படுத்தப்படும்னு அப்பத்தா சொல்லும் போது கொஞ்சம் வலிக்கும்.

படிப்பு விக்கிற விலையில் நீங்க இன்னும் 10 ரூபாயிக்கே படிப்பை வித்துட்டு இருங்கன்னு  சொல்லி  நான் கேலி பேசும் போதும் கூட அப்பத்தா ஏதும் பெரிதாய் விளக்கம் தருவதில்லை.
எத்தனை ஆசிரியர்கள் தன்னோட profession - ஐ இந்த அளவுக்கு நேசிக்கிறாங்கன்னு தெரியல.

வாழ்த்துகள் அப்பத்தா.

Monday, August 27, 2012

..??..

கூடை நிறைய 
பொம்மைகள்

கை நிறைய
பலூன்கள்

விற்பது மட்டுமே
விளையாட்டானது 
சிறுவனுக்கு.

0
வாங்கியதால்
மகிழ்ச்சி சிறுமிக்கு

விற்றதில் மகிழ்ச்சி 
சிறுவனுக்கு

மிஞ்சியது மகிழ்ச்சி 
என்பதில்  
மகிழ்ச்சி எனக்கு.

Friday, August 17, 2012

நீ பற்றியவைகள்..

0
கரியாமல் எரியும்  நான் 
நீ பற்றியதில்.

0
மிக மிகத் 
தனிமையாய் அழுகிறேன் 
ஈரமானாயா நீ?

0
எழுதிக் கொண்டேயிருக்கிறேன் 
ததும்பிக் கொண்டேயிருக்கிறாய் நீ!

0
கவிதைகள் உதிர்க்காமல் 
கடந்து  போகவே தெரியாத 
நீ பற்றி அறிவாயா நீ??

0
மொத்த மழையின் 
தெப்ப ஈரம் தரும் 
ஒற்றை துளியினாள் நீ.

0
உதிர்ந்த பூக்களையெல்லாம் 
கிளையேற்றி பார்க்கும் 
கவிதைமனம் கொடுத்ததென்னவோ 
நீ மட்டும் தான்.

0
கோர்ப்பதும் 
உதிர்ப்பதுமாய்
இருந்தன விழிகள்.
சிதறின 
சில நீ - க்கள்.

0
நீ யின்றி அமையாது உலகு 
கவிதையான பிழை.

Thursday, July 19, 2012

..!!..

என் குதிங்கால் ஏந்த
குழிந்த உன் உள்ளங்கையில்
ஊற்றி வைக்கிறேன் என் பிரியத்தை.

Wednesday, July 4, 2012

..!!..



அந்தப் பூங்காவில்

நடந்தலைந்து...

மிக இறுதியாய்க்கிடைத்த

இருக்கையில்,

பறவையின் எச்சம்!

Thursday, March 15, 2012

ஜெசிக்கு..

இன்னைக்கு அண்ணா பொண்ணுக்கு birthday.
காலைலேயே விஷ் பண்ணியாச்சு.
அட்ட நல்லாக்கீயா?-ன்னு நலம் விசாரிச்சாங்க குட்டிம்மா.
வேலை நேரத்திற்கிடையிடையே வந்துவந்து போன
அந்தக் குரல் இனிப்பு வழங்கி வழங்கிச் சென்றது.
0

உன்னுடைய ஒவ்வொரு
பிறந்த நாளுக்கும்,
இரண்டு பரிசுப்பொருட்கள் என்னிடமிருந்து.

ஒன்று,
இந்த பிறந்தநாளுக்கானது

மற்றொன்று,
இனி வரும்
எல்லா பிறந்தநாட்களுக்குமானது.

0

இன்றைய தேதி
எழுதும் போதெல்லாம்,
உன்னிடம்
எழுந்து வரும் மனதைத்
தடுக்க முடிவதில்லை.

0

நாட்காட்டி,
அலைபேசி,
கைகடிகாரம்,

எல்லாமும்
பெற்றுக்கொண்டது போக,
மீதமாயிருக்கிறது
இன்னமும் சொல்லப்படாத
உனக்கான ஒரு வாழ்த்து!

Tuesday, March 6, 2012

..!!..

கண்ணாடியில் வழியும்
மழை நீரை
உள்ளிருந்து நக்கிப்பருக
முயன்றுகொண்டேயிருந்த
உயர்ரக நாய்க்குட்டியை பார்த்தபடி
நனைந்து கொண்டிருந்தது
தெருநாய்.

Wednesday, February 15, 2012

..!!..

எதையுமே எதிர்பார்க்காதது
என் காதல்.

உன்னிடமிருந்து
உன் காதலை மட்டுமல்ல
உன்னையும் கூடத்தான்.

Tuesday, February 7, 2012

..!!..

குழந்தைகளுக்கும்
பொம்மைகளுக்கும் இடையேயான
உலகத்தை நோக்கி பயணித்தேன்.

மயில்பீலிக் கம்பங்களில்
பூக்களின் வேலியால்
சூழப்பட்டிருந்தது அவ்வுலகம்.

வேலிக்கு வெளியே
நானும் நிலவும்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்
அவர்களை.

பொம்மையுடன்
தானும் கைதட்டிக் கொண்டிருந்தது
ஒரு குழந்தை.

குழந்தையை அணைத்தபடி
உறங்கிக் கொண்டிருந்தது
ஒரு பொம்மை.

முத்தம் கொடுத்து
முத்தம் வாங்கிக் கொண்டிருந்தது
ஒரு குழந்தை.

தன்னைப் பியித்தெறியும் குழந்
தையை
சிரித்தபடி பார்த்திருந்தது
ஒரு பொம்மை.

இருவருமே பேசிக் கொண்டிருந்தா
ர்கள்
கேட்பது யாரோ??-என யோசிக்கும் என்னை
பெரிய குழந்தை என
கைநீட்டியது ஒரு பொம்மை
பெரிய பொம்மை என்றது குழந்தை.

இரண்டுமாகவும்
இல்லை நான்.

திரும்பிய திசையில்
நிலவும்.

கறை துடைக்கும்
வழிகள் பேசியபடியே
இருவருமாய் செல்ல,
கனவின் விழிப்பில்..
உறங்கிய என் குழந்தையுடன்,
பொம்மைகளும் ஓய்வாய்..!!