Tuesday, May 28, 2013

நானும் மகனும்..

என்னுடைய மகன் raymond.இரண்டரை வயது.
நிறைய பேசுறான்.கேட்டுட்டே இருக்கலாம்.

மதியம் அவனை தூங்க வச்சிட்டு சில வேலைகள் செய்யனும்னு எனக்கு plan.
பேசிட்டே இருந்தான்...கையில் விசில் வச்சு ஊதிட்டும்  இருந்தான்.முதல்ல விசிலை வாங்கினால்தான் தூங்கவைக்க முடியும்னு பேசிட்டே,வேகமா பிடுங்கி side-ல வச்சுட்டு காக்கா தூக்கிட்டு போயுடுச்சுன்னு சொன்னேன்.
எதுக்கும்மா எப்பவுமே காக்காதான் தூக்கிட்டு போகுது?கொக்கு குருவிலாம் தூக்கிட்டு போகாதான்னு கேட்டான்.கொஞ்சநேரத்தில் தூங்கிட்டான்.evening எழுந்து அங்கேயே கிடந்த விசிலை எடுத்துட்டு  தூக்கக் கலக்கதோடே..
எப்போ காக்கா வந்து விசிலை போட்டுசுன்னு வேற கேள்வி.

:)


நைட் தோசை ஊட்டிவிட்டுக் கொண்டிருந்தேன்.தெருவுல விளையாண்டுகிட்டேதான் சாபிடுவான்.அங்கும் இங்குமா நடந்துட்டே கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கணும்.அன்றைக்கு அவனை ஏமாத்தி கொடுக்கத் தெரியாமல் முழிச்சுட்டு இருந்தேன்.மூணு குட்டி உருண்டையாய் தட்டில் வைத்து இது அம்மா வாய்,இது அப்பா வாய்,இது raymond வாய் ன்னு நான் சொல்லிக்கொண்டே பிடித்து வைப்பதை சிரிச்சுட்டே பார்த்துட்டு இருந்தான்.இதுவரைக்கும் அப்படி சொல்லி ஊட்டினதே இல்ல.அவனுக்கு புதுசா இருந்தது அவன் கண்களில் தெரிந்தது.ok..,கொடுத்துடலாம்னு நம்பிக்கை வந்துச்சு.maymond  வாய் maymond -க்கு ,அம்மா வாய் அம்மாக்கு,அப்பா வாய் அப்பாக்கு ன்னு சொல்லீட்டு sir   ஒரு உருண்டை தவிர வேற சாப்பிடவேயில்ல.நானும் கட்டாயப்படுத்தல.


இப்படி அவன் நிறைய பேசுறான்...
அழகாயிருக்கு.

Tuesday, May 7, 2013

கேட்டவை -1-

கொஞ்சநாளுக்கு முன்னாடி வலை பதிவாளர் நேசமித்திரன் கூட பேசும் வாய்ப்பு கிடைத்தது.கவிதை எழுதுவது குறித்த உரையாடல் அது.மான்கொம்பு-இலையுதிகாலம்,நொச்சியிலை-மயில்பாதம்-நிலாமுகம் இப்படி கவிதைகள் குறித்தும் ,கவிதை எழுதும் விதம் பற்றியும் பேசியபிறகு நான் எதை எழுதினாலும் அதை நானே பொருட்படுத்திக் கொள்ளாத ஒரு மன நிலை எனக்கு.

அப்புறம் சில நாள் கழித்து புதிய வரிகள் எனக்குள் அதை எழுதாமல் அதை அப்படியே தூக்கி அப்புறமாய் வைத்தும் அது என்னை தொந்தரவு செய்தபடியே இருந்தது.

பிறகு மித்திரன் சார்க்கு எனக்கு தோன்றியதை நான் எழுதி அனுபுறேன் நீங்க அதற்கு வடிவம் கொடுங்கன்னு சொல்லி ஒரு மெயில் செய்தேன். 



விரித்து வைத்த நீல வரைபடத்தாளென வானம் 
எதற்காக நிர்ணயிக்கப்பட்ட 
புள்ளிகளோ அவை.
அதை இணைத்துவைத்த 
பென்சில்கரங்கள் யாருடையவையோ
x அச்சு 
y அச்சு 
தேடிய என் பயணம் நீள்கிறது 
தொடரும் நீள்மலைத்தொடர்களுடன் 

இதுதான் என்னுடைய கிறுக்கல் 

எதற்கோ நிர்ணயிக்கப்பட்ட 
புள்ளிகளை இணைத்துத் தோற்கும் 
பென்சில்கரங்கள் யாருடையவை 
நீல வரைபடதாளாய் படபடக்கிறது வானம் 

என் பயணம் நீள்கிறது 
தொடரும் நீள்மலைத்தொடர்களுடன் 

அரைவட்டமடித்து கிளையமர்கிறது 
ஒரு இராப் பாடி பறவை 
அதனிடம் கேட்க சில அட்ச தீர்க்க ரேகைகளின் 
கதைகளிருகின்றன 

இப்படிதான் அதை மித்திரன் சார்  திருப்பி கொடுத்திருந்தாங்க

நல்லாயிருந்தது.

Wednesday, November 14, 2012

..??..

ஒரு புறமுமாய் நீயும் 
மறுபுறமாய் நானும்   
கவனமாகக் கடித்த
நெல்லிக்கனியின் விளிம்புகளில் 
விரைவாய் விரைந்து 
நெருங்குகிறது நம் எச்சில்.

Monday, September 24, 2012

..??..

மாதத்தின் 
இறுதி இரவு.

தொடங்கியிருந்தோம் 

நாளை
வீட்டு வாடகை 
கரண்ட் பில்
வாட்டர் பில்
மளிகை பொருள்
அம்மாக்கு பணம் அனுப்பனும் 

இன்னும் 
இன்னும்
இன்னுமென 

மூச்சுவாங்கியது 
இருவரோடுங்கூட 
பிளாஸ்டிக்  உறைக்குள்
நீந்தும் வால் அணுக்களுக்கும்


Wednesday, September 5, 2012

ஆசிரியர் தினம்..

காலைலேயே அப்பத்தாக்கு வாழ்த்து சொல்லியாச்சு.
சொல்லியதில் எவ்வளவு சந்தோசம் அந்த 85 வயது பழமைக்கு.

தன் 16 வயதில் தொடங்கிய பணி இன்னுமாய் 
தொடர்ந்து கொண்டிருக்கு.தன்னிடம் படித்தவர்களின் 
பேரன் பேத்திக்கெல்லாம் அ எழுத சொல்லி கொடுத்துட்டு இருக்காங்க.
அப்பத்தா நல்லாசிரியர் விருது வாங்கியதில் 
 கர்வம் கொஞ்சம் உண்டு,அப்பதாக்கு இல்லை எனக்கு.

பிஞ்சு மழழையின் மனங்களுக்குள் 
எழுத்துக்களை அறிவிக்கும் அற்புதமான 
திறமைக்கு  நூறு வணக்கங்கள் சொல்லியே தீரவேண்டும்.
எனக்கும் எழுதப் படிக்க சொல்லித் தந்தவுங்க அப்பத்தா தான்.

அப்பத்தா டியூஷன் நேரங்களில்  நிறைய கவனித்துக் கொண்டே இருக்கலாம்.நிறைய ஒழுங்குகள் இருக்கும்.
சிலேட்டில் எல்லாருக்கும் கோடு போட்டு கொடுப்பாங்க.எல்லா பிள்ளைகளின் எழுத்தும் அழகாத்தான் இருக்கும்.எப்படி அப்பத்தா ன்னு கேட்டால் சிரிச்சு வைப்பாங்க.உச்சரிப்புகளை திருத்தும் விதம் எல்லாமே நல்லாயிருக்கும்.

அப்பத்தா குழந்தைங்களுக்கு  கொடுக்கும் தண்டனைகள் எல்லாம் எளிமையா இருக்கும் 
கால் கட்டை விரலை பிடித்துக் கொண்டு உக்காந்திருக்க வேணும்.
சிலேட்டை தலையில் சுமந்து உக்காந்திருக்க வேண்டும்.
அ ஆ  வரிசை சொல்லியபடியே உக்கி போடணும்.
க கா வரிசை சொல்லியபடி உக்கி போட்டால் பெரிய தண்டனை.
அப்பத்தாவைக் கம்புடன் பார்த்ததே இல்லை.

முதல் வகுப்பில் கூட சேராத குட்டீஸ் லாம் இருப்பாங்க.
அவுங்கல்லாம் திருக்குறள் சொல்லுவாங்க.
20 முதல் 30 வரைலாம் சொல்லீட்டு இருப்பாங்க.
மழழை மொழியில் கேக்கும் போது அத்தனை அழகும் பிரமிப்புமாய் இருக்கும்.

கதை பாட்டு கவிதை கொஞ்சம் பாடம் ன்னு நகரும் அப்பத்தாவின்  டியூஷன் டைம்ஸ் ஒரு வரம்தான்.

வெள்ளிக் கிழமைகளில் மட்டும் டியூஷன் முடியும் போது எல்லாருக்கும் ஆரஞ்சு மிட்டாய்.
நன்றி டீச்சர் ..நன்றி டீச்சர் ..ன்னு சொல்லிய படி வாங்கும் பிள்ளைகளை பார்க்கும் போது எத்தனை சந்தோசம்.உனக்கு என்ன கலர் உனக்கு என்ன கலருன்னு மாறி மாறி பிள்ளைகள்  கேட்டுக்குவாங்க.நானும் அந்த வரிசைகளில் பயணித்ததுண்டு.

அப்பத்தா அதிகாலையிலேயே எழும்பிடுவாங்க.5 மணிகெல்லாம் டியூஷன் ஆரம்பிச்சுடும்.
எதில் உக்காந்தாலும் சாய்ந்து உக்காருவதேயில்லை.
அப்பத்தாவை பொக்கை வாயுடன் பார்த்ததேயில்ல.
இப்போ வரைக்கும் தன்னுடைய எல்லா வேலைகளையும் தானே பத்துகிடுறாங்க.
அவுங்களுக்குன்னு ஒரு பிடிவாதமான routine இருக்கும்.

என் மரண செய்தி இந்த குழந்தைகளின் உளரும் மொழியில்தான் இந்த உலகுக்குத் தெரியப்படுத்தப்படும்னு அப்பத்தா சொல்லும் போது கொஞ்சம் வலிக்கும்.

படிப்பு விக்கிற விலையில் நீங்க இன்னும் 10 ரூபாயிக்கே படிப்பை வித்துட்டு இருங்கன்னு  சொல்லி  நான் கேலி பேசும் போதும் கூட அப்பத்தா ஏதும் பெரிதாய் விளக்கம் தருவதில்லை.
எத்தனை ஆசிரியர்கள் தன்னோட profession - ஐ இந்த அளவுக்கு நேசிக்கிறாங்கன்னு தெரியல.

வாழ்த்துகள் அப்பத்தா.

Monday, August 27, 2012

..??..

கூடை நிறைய 
பொம்மைகள்

கை நிறைய
பலூன்கள்

விற்பது மட்டுமே
விளையாட்டானது 
சிறுவனுக்கு.

0
வாங்கியதால்
மகிழ்ச்சி சிறுமிக்கு

விற்றதில் மகிழ்ச்சி 
சிறுவனுக்கு

மிஞ்சியது மகிழ்ச்சி 
என்பதில்  
மகிழ்ச்சி எனக்கு.

Friday, August 17, 2012

நீ பற்றியவைகள்..

0
கரியாமல் எரியும்  நான் 
நீ பற்றியதில்.

0
மிக மிகத் 
தனிமையாய் அழுகிறேன் 
ஈரமானாயா நீ?

0
எழுதிக் கொண்டேயிருக்கிறேன் 
ததும்பிக் கொண்டேயிருக்கிறாய் நீ!

0
கவிதைகள் உதிர்க்காமல் 
கடந்து  போகவே தெரியாத 
நீ பற்றி அறிவாயா நீ??

0
மொத்த மழையின் 
தெப்ப ஈரம் தரும் 
ஒற்றை துளியினாள் நீ.

0
உதிர்ந்த பூக்களையெல்லாம் 
கிளையேற்றி பார்க்கும் 
கவிதைமனம் கொடுத்ததென்னவோ 
நீ மட்டும் தான்.

0
கோர்ப்பதும் 
உதிர்ப்பதுமாய்
இருந்தன விழிகள்.
சிதறின 
சில நீ - க்கள்.

0
நீ யின்றி அமையாது உலகு 
கவிதையான பிழை.