Tuesday, August 13, 2013

விபத்து

11.08.13 அன்றைக்கு காலையில மதுரை ஒத்தக்கடை தாண்டி  ஒரு கார் மற்றும் பஸ் நேருக்கு  நேராய் மோதிய விபத்தில் தொழிலதிபர் மனைவி சிறுமி பலி - ன்னு ஒரு accident news.அந்த செய்தியை  வழக்கம்  போல ஐயோ பாவம்னு மட்டும்  நினச்சுட்டு கடந்து போய் விட முடியல.அவர் எங்க ஊரு , எங்க பாட்டி வீட்டுத் தெரு. 

அவுங்க வீட்டுக்கு மட்டுமில்ல ,எங்க ஊருக்கே துஷ்ட்டி போலத்தான் இருந்தது.

அவர் பெரிய இடத்து மனுசன்,நிறைய தொழில்கள் இருக்கு.தேவை இல்லாத எதுவும் அவரைப் பத்திக் கேள்விப்படல.ஊருக்குள்ள சில முக்கியமான பொறுப்புகள் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கு.அவ்வளோதான் எனக்குத் தெரியும். 

நான் படிச்ச ஸ்கூல்க்கு அவர்தான் correspondent .இப்போவரைக்கும் கூட.நான் 12th படிக்கும் போது சினிமா தியேட்டரில் அவர்  பார்த்துட்டார்.வேகமா அப்பா பின்னாடி ஒதுங்கின என்னை பார்த்துட்டு  இனிமேல் உன்ன இங்க பார்த்தேன்னா பள்ளிக் கூடத்துக்குள்ள விடவேணாம்னு சொல்லிடுவேன் பாப்பான்னு சொல்லிட்டு  அப்பாக்கும் திட்டு.

நான் பள்ளிகூடத்தில்தான் அதிகமா பார்த்திருக்கேன்.படிக்கும் போது தினமும் அவரை பார்த்துடுவேன்.சிரித்த முகம்தான் பெரும்பாலும்.

parents meeting வந்தால் எங்களுக்கெல்லாம் முந்தி வந்து உக்காந்து ,mark register - ஐ புரட்டிக் கொண்டிருப்பார்.இந்த ஆளோட முடியலடி, எங்க அப்பா கூட இப்படில்லாம் advice பண்ணமாட்டாரு, பெரிய கலர் காமராசர்ன்னு நினைப்பு இப்படில்லாம்  கமெண்ட்ஸ் கிசுகிசுக்கும்.அவர் எழுந்ததும் ஒரு அமைதி.அவர் பேசும்போது மரகிளைகளில் இருக்கும் காக்கா குருவி சத்தம் மட்டும் extra கேக்கும்.தியேட்டர்ல  பார்த்ததை சொல்லி திட்டிடக் கூடாதுன்னு பயந்து பயந்து உக்கார்ந்திருந்ததெல்லாம் ஒரு கதை.

ராஜபாளையம்  தாண்டி கொண்டு வந்துட்டாங்களாம் .
அவருக்கும் அவர் மனைவிக்கும் பிறந்தநாளும் ஒரே date தானாம் ,இன்னைக்குதான் அவர் அப்பா நினைவு நாளும் ..நேத்து கிளம்பும் போது ஸ்கூல் - ல இருக்கும் அப்பா  சிலையை கழுவி ரோஜாப்பூ மாலை போட சொன்னாராம்..இப்படியே ஏதேதோ சொல்ல அமைதியா கேட்டுகிட்டே இருந்தேன்..but 
 car accident ஆகும்முன்னாடி அவர்  செய்த 4 போன் calls - la ஒரு call  ஸ்கூல் சம்பந்தப்பட்டதுன்னு சொல்லிக் கேக்கும்போது  வெகு சாதாரணமாக துளிக் கண்ணீர் வழிந்து போனது. 

சாயங்காலம் 7.30 pm மூன்று body - யும் கொண்டு வந்தாங்க.
அந்த பெரிய்ய்ய வீட்டில் 3 உடல்களும் வரிசையாய் கிடத்தியிருந்தது தாங்க முடியாத அழுத்தத்தையே கொடுத்தது.

சிதைந்து இரண்டு முகங்களுக்கிடையே 
தேவதை துயிலுவதைப் போல் இருந்த அந்த ஏழு வயது சிறுமியின் முகம் மறக்க சில வருஷங்களாகும்.
உன்னோட அண்ணன் அப்போல்லோ - ல இருக்கானாமே.அப்பா அம்மா வை சென்னை ஏர்போர்ட் ல receive பண்ணவாடி தங்கம் போனன்னு மிக மெதுவாக சொல்லி மனங்கசந்த ஒரு சொந்தத்தை கைத்தாங்கலாக ஒருவர் அழைத்துப் போனார்.   


கூக்குரலில்லை அலறலில்லை ஒரே அமைதி.
ஊரே கூடியிருந்தது ஒரு தெருக்குள்.
நிசப்த்தத்தின் கனம் புரிந்தது.

காலைல அடக்கம்.பேசிக்கொண்டார்கள்.

மயானத்தை முழுவதும் சமதளம் ஆக்கி ,நிறையா மண்ணடித்து உயர்த்தியிருக்காங்கன்னு என்னோட அப்பாட்ட ஒருத்தர் சொல்லிட்டுஇருந்தாரு.கடைசியா மனுஷன் சுடுகாட்டையும் சுத்தம் செய்துட்டுதான் போறாரு போலன்னு நினைச்சுக்கிட்டேன்.

விளையாண்டு கொண்டிருந்த என்னோட மகன் 
அவனாவே வந்து பேசுறான்.(கடந்த கொஞ்ச நேரமா அவன்ட்ட எதுவுமே பேசலங்கிறது  உணர்ந்து அவனைக் கவனிச்சேன்)
ம்மா .. நடந்துதான் போகணும் 
ஓடவே கூடாது  காரு வேமா ஓடுச்சா அதான் புண்ணு வந்துச்சு 
maymond லாம் நடக்கத்தான் செய்வான் 
அப்படி சொல்லிக் கொண்டே மெது மெதுவாய் நடந்து காண்பித்தான்.

என்னோட மகனுக்கு எதுவோ புரிந்திருக்குது.