Thursday, December 8, 2011

அந்தி - 3 -

மரிக்கும் பகலுக்கும்
உயிர்க்கும் இரவுக்கும்
இடையே
துக்கம் சந்தோசம் - எனும்
சலனங்களற்ற மௌனம்
அந்தி.

Tuesday, November 29, 2011

செரலாக் பொழுதுகள்..

ம்மா..
மியாவ்..
பெள பெள ...
கா கா..
கியா கியா..

எல்லாமுமாகவும்
மாற வேண்டியிருக்கிறது
அம்மாவாகிய நான்
ஒருவேளை உணவூட்ட

0

செரலாக் நரைமீசையுடன்
கம்பீரமாய்த்
தவழுகிறான்

0

ஒவ்வொரு மாதமும்
ஒவ்வொரு பிளேவர்
எல்லாவற்றிலும் அம்மா வாசனை

0

புறா பாரு
காரு பாரு
மலை பாரு
மரம் பாரு
குருவி பாரு

வாயிலிருந்ததை
விழுங்கிவிட்டான் போல,

அள்ளிக் கொடுக்கும் கரண்டியையே
பார்த்திருந்தான் அவன்

0

நிலா
வட்டமா?
சதுரமா?

குழப்புகிறது..

பாற்சோறு கிண்ணம்

Thursday, November 24, 2011

..!!..

அதிகாலையின் ஒவ்வொரு கோலத்திலும்
அழகாய் விழித்திருக்கிறது
யாரோ ஒருவரின் உறக்கம்.

Sunday, November 13, 2011

..!!..

எவையுமே
அல்லது
யாருமே
உன்னை நினைவுபடுத்தியதாய்..
நினைவில்லை.

நீ..,
உன்னில் மட்டுமே
இருக்கிறாய்.

Sunday, October 30, 2011

..!!..

பிறைகூன் வெளித்
தொட்டிலினுள்,
பிள்ளை நிலா.

Wednesday, October 19, 2011

..!!..

வரவேற்பறையின் இருக்கைகளில்
பிடித்த ஒவ்வொருவரையாய்
அமர்த்திப் பார்க்கிறது
என் தனிமை.

Monday, October 10, 2011

..!!..

தினம் தினம்
ஒரு செய்தியை
வாசலில் வைத்துப்போகிறது
காலம்

எனக்கான
இன்றைய செய்தி

ஒற்றை இறகு!!

Tuesday, October 4, 2011

நீயிலிருந்து நீ வரை..

நீ என்பதை நிரப்பும்
வார்த்தை தேடித்தான்
என் எழுத்துலகம் விரிகிறது.

நான் என்பதை நிரப்பப்
போதுமானதாய்
இருக்கிறது..
நீ!

Thursday, September 29, 2011

அந்தி -2-

பகலின்
சோம்பல் முறிப்பு.

இரவின்
குழந்தைப் பருவம்.

நாளின்
மூன்றாம் வணக்கம்.

தேநீருடன் விடியும்
மற்றொரு அதிகாலை.

அந்தி என்றுமே
ஆனந்தம்தான்!!

0

சூரியனுமில்லை,
நிலவுமில்லை..
ஒளிப்பந்தி வைக்கும்
அந்தி அதிசயம்தான்!!

Wednesday, September 21, 2011

ம்மா..

வலி

கண்ணீரில்லா
அலறல்கள்

பிறந்துவிட்டான்

இன்னும் மயக்கமுறவில்லை
நான்
தெளிவான குரலில்..

என்னோட அம்மாவை
கூப்பிடுறீங்களா..
கொஞ்சம் பாக்கணும்!!

துணியில்
சுற்றிய பேரனுடனும்
புன்னகையுடனும் அவள்

இப்போதும்,
வலி

துளிக்கண்ணீர்
சத்தமில்லா
அலறல்களுடன்

தெளிவான மயக்கம்
என்னுள்..!

Saturday, September 17, 2011

..??..

யாரோ செய்த பாவம்
கை கால் முளைத்து
ஆடையின்றி,
கண்ணாடி வழி
பார்த்திருந்தது..

ஆடையணிந்திருந்த
மெழுகு பொம்மையினை!!

Tuesday, September 13, 2011

..!!..

காதல்தான் பூமியின்
ஈர்ப்புவிசையோ...?
ஆப்பிள் வழி
அறியப்பட்டதால்..!!

Thursday, September 1, 2011

நிலாக்கள்..

-1-
தன்னைக் காட்டி
சோறூ
ட்டப்படும் குழந்தைகளை
வேடிக்கை பார்க்கிறது நிலா.

-2-
யுகயுகமாய் நீராடியும்
கறையுடன் சிரிக்கும்
மிதக்கும் நிலா!!

-3-
அழைக்க அழைக்க
செல்லாமல்,
பிழைத்தும் கிடக்கிறேனே??
என வேதனித்தது..
கறை அதிகமாவதை
உணர்ந்த நிலா.

ஏதோ ஒரு தெருவின்..,
எல்லா வாசல்களிலும்
ஏறி இறங்கியபடி
சென்றுகொண்டிருந்தாள் ஒரு சிறுமி,
நிலா நிலா ஓடி வா.. என்றழைத்தபடியே!!

Friday, August 26, 2011

..!!..

பார்த்துக்கொண்டேயிருந்த
பாட்டிம்மாக்கு
ஒரு பொட்டலம்.

மற்றொன்றில்
பகிர்ந்தோம்..

இன்னும் தீரவேயில்லை
இருந்துகொண்டேயிருக்கிறோம்
நீயும் நானும்!!

Saturday, August 20, 2011

இது கவிதையல்ல...

இது மழைக்கவிதை
என்றேன்...

குடையுடன் வாசிக்க
வந்த சிலர்.
லயித்து குடைவிரிக்க
மறந்து நனைந்தனர்..

தெறிக்கும் துளிகளிலிருந்து
தம்மை ஒதுக்கிக்கொண்டனர் சிலர்...
விரித்த குடைக்குள்

சிலர் கிடைக்காத
நிலா நட்சத்திரம் தேடினர்..

இடி..
மின்னல்..
குளிர்காற்று..
வானவில்..
என தேடல்கள் கூடியிருக்க,

முதலாவதாய் எழும்
மண்வாசனை நுகர
யாராவது வாய்த்தால
மழை என்னுள்!!

Wednesday, August 17, 2011

..!!..

சுவாசிக்கும் ஆசை வந்தவுடன்
இறந்துவிட்டது
நீர்க்குமிழி!!