Saturday, May 30, 2009

மயிலிறகு...

நம் சந்திப்புகள்
ஒவ்வொன்றும்
ஒரு மயிலிறகு ...

தோகைகள் பல
சேகரித்துவிட்டேன்...

புதிய மயிலிறகை
வைக்கும் வெற்றிட
ஏற்பாடுகளோடு!

Sunday, May 17, 2009

இவை கவிதைகள் அல்ல Confusions..

இப்பொழுதெல்லாம்..
உன் நினைவுகள்தான்
என் புதுக்கவிதைகள்.
முற்றுப்புள்ளிகளாய்...
கண்ணிர்த் துளிகள்!!

ஏனோ அழுகிறேன்..
ஏனோ ஏங்குகிறேன்..
உனக்காகவா?இல்லை..,
உன்னாலா?
தெரியவில்லை

உனக்குத் தெரியாது
ஆனால் - நான் உனக்கு
அடிமை!

என்னாலியன்ற அளவு
உன்னை நினைத்துவிட்டேன்.
ஆனால்..,
இன்னும் முடிக்கவில்லை

உன் வார்த்தைகளின்
எதிரொலி, இன்னும்
எனக்குள்..

உனக்குத் தெரியாமலேயே
உன்னிடம் தோற்றுக் கொண்டிருக்கும்
நான்..,"எனக்குப் புதிது"

இல்லாமை இனிமையாகிறது!

மழையில்
குடையில்லை..

பௌர்ணமியன்று
வீட்டிற்குள் அனுமதியில்லை..

மெழுகும் அதன் ஒளியும்
மின்சாரமில்லை..

படபடக்கும் பட்டாம்பூச்சி
பூவில் தேனில்லை..

நின்றால் மட்டுமே தெரியும் குழந்தை
பயணத்தில் உட்கார இடமில்லை..

கவிஞனின் பசிக்கு
உணவில்லை..

இமைக்காத பார்வை
நமக்குள் மொழியில்லை..

உன் நினைவுகளோடு நான்
என்னோடு நீயில்லை..

ஆம்!
"இல்லாமை
இனிமையாகிறது "

உன்னை நினைத்து உதறிய மைத்துளிகள் இவை..

இமைப் பொழுதையும்
விணாக்குவதில்லை
உன்னை நினைக்காமல்....

~~~~o~0~*~0~o~~~~

பாதுகாத்துக் கொள்கிறேன்
பரிசாகத் தா... உன்
இமை முடியினை..

~~~~o~0~*~0~o~~~~

"இல்லை" என்று சொல்ல
நினைத்து...
"ஆம்"- என்றேன் நீ
நிமிர்ந்து பார்த்ததினால்!

~~~~o~0~*~0~o~~~~

பசியாயிருக்கிறது
உன் வார்த்தைகளை மட்டும்
பரிமாறு...

~~~~o~0~*~0~o~~~~

பயணம் இனிமையாகிறது!
ஜன்னலருகில் இடம் கிடைத்தாலும்
உன்னருகில் இடம் கிடைத்தாலும்...

Saturday, May 16, 2009

சுகம்தான்...

உன்னிடம்
தோற்று போவதும்
சுகம்தான்...

உன்னிடம்
முட்டாள் ஆவதும்
சுகம்தான்...

உன்னால்
கடிந்துகொள்ளப்படுவதும்
சுகம்தான்...

உன் அறிவுரைகளைக்
கேட்டுக்கொண்டிருப்பதும்
சுகம்தான்...

உன் கட்டளைகளைக்
கடைப்பிடிப்பதும்
சுகம்தான்...

உன்னால்
திருத்தப்படுவதற்காய் செய்த
தவறுகளின் தண்டனையும்
சுகம்தான்...

உனக்காக...
என் ஆசைகள்
சிலவற்றை மறைப்பதும்
சுகம்தான்...

பிடிக்காது எனினும்
நீ செய்துவிட்டதால்
சகித்திருப்பதும்
சுகம்தான்...

தன்மானம் துறந்து
தவறு என் பக்கம்
இல்லையென்றாலும்
உன்னிடம்
மன்னிப்புக்கோருவதும்
சுகம்தான்...

நீ எனக்கானவன்!
என்பது
உண்மையாய் இருக்கும் வரை...
மட்டுமல்ல..,
"பொய்யாய்ப் போனாலும்"

நான் என்ன செய்ய?

வார்த்தைகளுக்குள்...
வாக்குவாதம்.,
உன்னைப் பற்றி எழுத
தன்னைப் பயன்படுத்த
வேண்டுமென்று!

வெள்ளைப் புடவை..

தன்னை வெறுத்து
ஒதுக்கும் சமுதாயத்திடம்
விதவையானவள் நாளெல்லாம்
"சமாதான முயற்சியில்"

மழை..

மேகங்களில் அடைபட்டிருந்த
தேகமற்ற பிணைக்கைதிகளுக்கு..,
தென்றலின் பேச்சு வார்த்தையால்
இன்று விடுதலையோ?

தாய்மை...

என்னை உன்னிடம்

முழுமையாகக் கொடுத்த பின்தான்

முழுமையடைந்தேன் நான்!

பிடிக்கும்..

என்னை நோக்கி நகர்த்தாத

உன் கருவிழியின்

பிடிவாதம் பிடிக்குமெனக்கு!

நீ மட்டும்..!

நகன்று கொண்டேயிருக்கும்
நதி அவர்கள்.
என் குவளைக்கான நீராய்...
நீ மட்டும்!

தொடரும் நீளமான
நிலம் அவர்கள்.
எனக்கான பூர்வீகத்தின்
ஆறடி நிலமாய்...
நீ மட்டும்!

பூமியை நிறைக்கும்
பூங்காற்று அவர்கள்.
என் உயிர் கட்டும்
சுவாசமாய் ...
நீ மட்டும்!

தொலைவாய் விரிந்த
வானம் அவர்கள்.
என் வீட்டின்
தென்னங்கீற்றின் பின்
ஒளிந்து எனைப் பார்க்கும்
ஒரு வரி வானமாய்...
நீ மட்டும்!

பற்றி எரியும்
தழல் அவர்கள்.
என் படுக்கை அறையின்
மெழுகின் சுடராய்...
நீ மட்டும்!

Thursday, May 14, 2009

எப்பொழுது..?

எனக்குப் பிடித்தவைகள்
எல்லாம் கொடுக்கிறாய்...
"உன்னை எப்பொழுது?"

நீ நேசித்தவைகள்
எல்லாம் கேட்கிறாய்...
"என்னை எப்பொழுது?"

எனக் கேட்டவளும்...
கொடுத்தவனும்...
தங்களுக்குள் புழுங்க..,

தனித்து விடப்பட்டிருந்தது
காதல்!

பயணம்...

நெரிசல்..

வியர்வை..

முகம் தெரியாதவர்களின்
ஸ்பரிசங்களின் சங்கடம்...

அடைத்த ஜன்னல்...

அதனூடே,
நான் பார்க்க...
உன் பெரிய கரங்களின்
சிறிய அசைப்பு.

அத்தனையும் மறந்தே போனது..

வந்துவிட்ட எனக்கான
நிறுத்தம் உட்பட!!!

Wednesday, May 13, 2009

அறியாமை...

இறுதி ஊர்வலத்தில்
இன்பமாய்ப் பயணித்தன
மலர் வளையங்கள்..
தனக்கும் அதே நிலையென
அறியாமல்!!

..!..

புலம்பல்களின் மத்தியில்
புன்னகை...
பிணத்தின் மேல்
மலர் வளையம்!!

Tuesday, May 12, 2009

நம்மை...

நம்மைப் பிரித்து
வைத்திருக்கும் தூரம்
பிழையாகிவிடுமா என்ன?
நாம் இருவரும்
சரியாகவே இருக்கையில் ....

நிச்சயதார்த்தம்...

இன்று...
கணவனாக
நிச்சயிக்கப்பட்ட
இவன்..,
என் வருங்காலக்
காதலன்!

Sunday, May 10, 2009

..!!..

பசியிலிருக்கும் தன் பிள்ளையை
நினைவிற்கொண்டு

பகலில் தன்னைப்
பரிமாறிகொண்டிருந்தாள்

அவள்...
"விலைமகள்"

ஹைக்கூ..

எழுந்து ஆரவாரமிட்டு
கைகள் தட்ட ஆசை.
ஆனால்,
ஏழ்மை தடுக்கிறது..
சட்டையின் கைக்குள்
கிழிசல்கள்!!

மௌனங்கள்

உன்னுடன் பேசுவதற்கான
என் தனிமை
நேரத் தயாரிப்புகளில்..,
வார்த்தைகளுக்கு
சுயம்வரம்
நடத்தினேன் நான்.
மௌனங்கள் கொடுத்து
தொலைந்தே போயின
வார்த்தைகள் எல்லாம்..!

..!?..

மௌனங்கள் கொடுக்கிறேன் நான்..
"உன் தூக்கம் கலையாமலிருக்க"
நீயோ வார்த்தைகள் கேட்கிறாய்..
உன் கனவுகள் கலையாமலிருக்க!!

Friday, May 1, 2009

நான் கடல்...

நான் கடல்...
எல்லோரும் நதிகள்..,
எவராலும் என்னை
நிரப்பமுடியாது.
ஆனால்
நீ இன்றி
வற்றி போவேன்...!