Saturday, August 29, 2009

அந்த நூல் அவனை வாசிக்குமா??

சத்தம் போடாதே மனமே..,
அவளைக் கண்டதும்.
இது நூலகம்!!

பல நேரங்களில்
நான் நூலகத்திற்கு செல்வது..,
அவளை வாசிப்பதற்காக மட்டுமே!!

எதற்காக..அவள்,
புருவங்கள் நெரித்தாள்?
விழிகள் விரித்தாள்?
குறுநகை கொண்டாள்?
எந்த வரிகளில் கரைந்து போனாள்?-என..,
எத்தனை சந்தேகங்கள் என்னுள்!!
"அவளைப் படித்த பின்"

வரிகளின் கரைகளில்
உருளும்.. அவள் விழிகளின்
கரம்பிடித்து உலவும்
என் மனமும்!!

ஆழ்ந்த கவனத்துடன்
நகர்ந்துகொண்டே இருக்கிறாள்..
நகர்த்தும் பக்கங்களுக்குள்.
நானோ..அவளினுள்!!

"அசையா ஓவியம்"
"இமைக்கும் சிற்பம்"
"தேவதை நீ
நூலகம் கோயில்"
"என்னிதய நூலகத்தில்
கவிதைத் தொகுப்பாய் நீ!"-என
அலங்கரிக்கிறேன் அவளை
என் கவிதைகளாலும்..
கனவுகளாலும்..
ஆனால்,அவளோ..
கலைந்த கூந்தல் சரிசெய்யும்
விரல்களின் அசைவில்..-என்
கனவுகள் கலைக்கிறாள்!!

அவள் புரட்டிய புத்தகங்களிலேயே
புதைந்து போகிறேன் நான்..
அவள் கைரேகைகள் தேடித்தேடி!!

தொடர்ந்தே இருந்தாலும்
தொலைவாகவே இருக்கிறேன்.
என்றாவது ஒருநாள்..
நேரம் ஒதுக்குவாளா அவள்..?
என் விழிகள் வாசிக்க!!

ஆம்!!

அந்த நூல்
அவனை வாசிக்குமா???

Wednesday, August 26, 2009

உன்னிடம்....

-1-
என்னிடம்..கூட இல்லை
உன்னிடம் மட்டும்தான்
நான் இப்படி!

-2-
எனக்கான ரகசியங்கள்..
உன்னிடம் இருக்கும்
என் நினைவுகள்!

-3-
உன்னைப் பார்த்த
சந்தோசத்தில்..
உன்னிடம் கூடப்
பேச மறக்கிறேன் நான்!

-4-
உனக்கே..உன்னிடம்
இல்லாத உரிமை
எனக்குண்டு!

-5-
உன்னிடமிருந்து
விலகும் முயற்சியின்..முடிவில்,
உன்னைத்தான் வந்தடைகிறேன்!

Friday, August 21, 2009

மூன்றும் காதலே..

-1-
களவு
என்பதால்
காதலும் பாவமே!!

-2-
கோபத்தின் உச்சத்தில்
அவர்கள்..

"போய்விடு" என்றான்
அவன்..

"ம்..போகிறேன்" என்றாள்
அவள்..

"இருவருமே பொய்
சொல்லுகிறார்கள்"
என்றது
காதல்..

-3-
காமம்
அவர்கள் வியர்த்திருந்தார்கள்
காதல் காற்று வாங்க சென்றது..

Wednesday, August 19, 2009

உனது பெயர்..

எனது புத்தகங்கள் எல்லாம்
அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது..
உனது பெயராலே!

எனது உளறல்களும்
எனது கிறுக்கல்களும்
உனது பெயராகிப் போனது!

உன்பெயரின் எழுத்துக்கள்
சொல்லியே.. பூக்கள் பறிக்கிறேன்!

உன் பெயரின் முதல் எழுத்தாய்
என் ஒற்றை முடி வளைக்கிறேன்!!
அது கலையாமலிருக்க..அதில்-என்
நெற்றி பொட்டை ஒட்டுகிறேன்.

உன் பெயர் எழுதியே
படிந்த தூசி விலக்குகிறேன்!

சிதறிய வார்த்தைகள் சேர்த்து
உன்பெயர் புனைகிறேன்!

இனிப்பை நேசிக்கும்
குழந்தையின் மனம்போல
எனது பேனாவும், மையும்
உனது பெயரை நேசிக்க ஆரம்பித்துவிட்டன!
ஆம்..,
நீயே...எழுதியிருக்கமாட்டாய்
இத்தனைமுறை உன்பெயரை!

உமிழப்பட்ட மையெல்லாம்
உன் பெயர் சொல்லியே
உறைந்து போனது..,
உயிர் துறந்தது..!!

உன் பெயர் எழுதும்போது..
கரைந்த மை,
மோட்சம் பெற்றது!!
சிதறிய மை,
அதிஷ்டம் இழந்தது!!

உனது பெயர் எழுதிக்
கரைந்த இறந்தகாலம்
உன் பெயரை உள்வாங்கி
உயிர் பெற்றது.

எனது பெயர் முழுமைபெற்றது
உனது பெயரோடு
தன்னைச் சேர்த்தபோது!

நான் இறந்தபின்
பிறந்த குழந்தை,
உன்பெயர் சொல்லி அழைக்கப்பட்டால்...
என் ஆன்மா திரும்பிப் பார்க்கும்!!

Wednesday, August 12, 2009

வறுமை.....

சிசுவின் அடிவயிற்றில் நெருப்பு..,
அவள் முலைவழியே ரத்தம் !!

Monday, August 10, 2009

அம்மா போயிட்டு வாறேன்மா...

கடந்தகால வாழ்வை
அசைபோடும் பொக்கைவாய்த் தாத்தாவின்
நினைவில் கூட..
பள்ளிக் காலம் வந்து போகும்!!

நாமும் நினைவுத் தூசியைத்
தட்டிப்..பயணிப்போம்.,
நம் பள்ளிக் காலப் படிமங்களுக்குள்!

மாவுக் குச்சி..
பென்சில்..
பேனா..என வெவ்வேறு எழுதுகோல்கள்
நம்மைக் கிறுக்கிய காலம் அது!!

கடித்து பகிர்ந்த
தின்பண்டம்...
அதன் எச்சிலைப்
பெரிதுபடுத்தாது வாங்கிச் சுவைத்து
சிந்திய புன்னகைப் பூக்கள்...
கடனாய்கொடுத்த
மைத் துளிகள்-என்ற
சின்ன சின்ன
பரிமாற்றங்களில் தான்
நம் நட்பு வானம் விடிந்தது!!

பள்ளி மைதானத்தின்
விரிந்த வானத்தில்..
நிறைந்திருந்தது நம் உலகம்!

பள்ளி மணி ஓசை..
நட்ட மரக் கன்றுகள்..
முதல் சுற்றுலா..
முதல் தோழி..என
நாம் கடந்துவந்த
ஹைகூகளின் பட்டியல் நீளும்!

நடக்கவே தெரியாது நமக்கு
ஓடித்தான் நடந்தோம்..
உண்மை கூற வேண்டுமெனில்
பறந்தே திரிந்தோம்..
ஆம்!!
ஒரு கூட்டுப் பறவைகள் நாம்.
நமது சிறகுகள்..
சீருடையின் ஒரே வண்ணத்தால் மட்டுமே
அலங்கரிக்கப்பட்டிருந்தன..
இன.. மத..பேதமின்றி!!

விடுமுறை தினங்களிலும் கூட
பாடப் புத்தகங்களோடு பள்ளியில் நாம்..
சிரித்து விளையாடுவதற்காக!!

பழகிய விதிமுறைகள்..
திசைமாறிய குறிக்கோள்கள்..
நேராய் மாற்றிய தண்டனைகள்..
மதிக்க ஆரம்பித்த ஆசிரியர்கள்..
முயற்சிக்குப் பின்னும் தோல்விகள்..
தானாகவே வந்தமைந்த வெற்றிகள்..
இரசிக்க ஆரம்பித்த பாடல்கள்..
புரிய முயற்சித்த பாடங்கள்..,-எனத்
துவங்க ஆரம்பித்த போதுதான்
புரிந்தது..,
முடியவிருந்த பள்ளிக்காலத்தின் அருமை!!


Friday, August 7, 2009

...!!...

கடந்து செல்லும்
உனது ஊர்ப் பேருந்துடன்..
ஆசையாய்க் கைகோர்த்துக் கொள்ளும்.,
எனது மனமும்!

Wednesday, August 5, 2009

பலூன்காரன்...

சுவாசத்தை விற்கிறான்..,
சுவாசிப்பதற்காக!!

Monday, August 3, 2009

யாசகம்...

அதிகமாகவே வளர்ந்துவிட்ட
தலைமுடியுடன்.. நகங்களும்..

முதலாமத்தில்
எண்ணையின் "இல்லாமை"
இரண்டாமதில்
அழுக்கின் "நிறைவு"

இந்த சோகமான
முரண்பாடுகளுக்கிடையில்
ஆணா?
பெண்ணா?-என்ற
வினாக்களுக்கு இடமேயில்லை..,
அந்த நடை பயின்ற
மனிதப் பிறவி
புழுதியை மட்டுமே
ஆடையாகக் கொண்டதால்!!

வலதுகையால்..
தலையைச் சொறிந்து கொண்டே
நீட்டிய இடதுகையின்
உள்ளங்கையில்..
நான் வைத்த
பழைய ஒருரூபாய் நாணயம்
புதிய ஒளியைக் கொடுத்தது
அந்த இளம்பிறையின் முகத்தில்!!

"எந்தத் தேவையைப்
பூர்த்தி செய்துவிடும்
இந்த ஒற்றை நாணயம்.."என்ற
என் எண்ணக் குடைச்சலுடன்
இந்த நிகழ்வு
முற்று பெற்று கொண்டிருக்க....

கடந்து சென்று கொண்டே
என்னை நோக்கிய அந்தக்
குழந்தையின்..
விழுந்த பற்களுக்கு இடையே
எழுந்த புன்னகை
மீதமாய் என்னில்...

கொடுத்ததற்கும் மேலாகப்
பெற்றுக் கொண்ட நானோ..
இப்பொழுது..,
கடனாளியாக!!!