Saturday, March 27, 2010

...நீ...

நீ கொடுத்த
பரிசுப் பொருட்களெல்லாம்
நீயாகிப் போயின எனக்கு..!!

Saturday, March 20, 2010

..2003 மார்ச் 20 அமெரிக்கா vs ஈராக்..

மனிதர்களோடு
மரித்துக் கொண்டிருக்கிறது
மனிதமும்..!

மனிதநேயத்திற்கு
வைக்கப் பட்டதால்.,
மரித்த மனிதர்களுக்கு
வைப்பதற்குப் பஞ்சம்
"மலர் வளையங்கள்"

வெடியின் சத்தத்தில்
நாட்டை விட்டு
வெளியேறியது "அமைதி"
தனக்கு அமைதியைத் தேடி!

சமாதானம்
சமாதியாகின்றது
சப்தமின்றி..!

உயிர் வழிந்தோடுகிறது
உறையாத..
இரத்தத்தோடு !

இரத்தத்தின் பிசுபிசுப்பில்
நிலத்தின் நிறம்மாறிக்
கொண்டிருக்கிறது
மனிதர்களின்
மனம் மாற வழியில்லை!!

உயிரின் உன்னதம்
உணராமல்.., மனிதன்
மனிதனை அழிக்கப்
போராடுகிறான்...!

ஆயுதங்களைஅழிக்க..
அழியாத போர்
ஆயுதங்களால்..!!
முரண்பாடான காரணங்களோடு
உடன்பாடேனோ?உண்மை புரியவில்லை...

அங்கே
காயங்களோடும்
கண்ணீரோடும் கதறும்
மனிதர்கள் பற்றிவாசித்த
செய்தித்துளிகள் என்னுள்
கண்ணீர்த் துளிகளாய்...!

அவைகள்..,
காற்றில் கலந்து
அவர்கள்
காயங்களுக்குமருந்தாகட்டும்!!

(பின்குறிப்பு: படிக்குப் போது எழுதினது..இப்போ டைரி-யை திருப்பும் போது கிடைச்சது.நினைவுகளில் வந்து போன,அந்த நாட்கள்.. உங்களின் பார்வைக்கும் ..

Thursday, March 11, 2010

குளியலறை கவிதைகள்...

நான் குளிக்க
காத்திருக்கும் கடல்..
"ஒரு வாளித் தண்ணீர்"

ஆடை களையும்
நேரத்தில் மீண்டும் அவசரமாய்
சரிபார்த்துக் கொள்ளும் மனம்
"பூட்டிய கதவை"

அங்கமெல்லாம் பரவியிருப்பது
உயிரா?..,உன்நினைவுகளா?..,
தெரியவில்லை,இப்போது அவைகளுடன்
"ஊற்றிய நீரும்"

தன்னை அழுக்காக்காமல்
என் அழுக்கை நீக்கும்
"ஒரு சிறு சோப்புத் துண்டு"

மேனியில் வழியும்
மேகங்கள்..
"சோப்பு நுரைகள்"

உலரும் நுரைக்குள்
உன் ஈரநினைவுகளுடன் நான்..,
எங்கோ கேட்கும்
"உனக்குப் பிடித்த பாடல்"

தேய்த்துக் குளிக்கையில்
விரல் பட்டதால் - தன்
தேகம் சிலிர்த்துச் சினுங்கும்
"கொலுசு முத்து"

ஆசையாய்ப் பார்க்கும்
மஞ்சளை..அவஸ்த்தையாய்ப்
பார்க்கும் நான்.
"அணியயிருக்கும் வெள்ளை சீருடை"

காற்றிக்கும் விடுதலை..
"தெறித்த துளிகள் பட்டு
உடையும் நீர்க் குமிழி"

என்னைக் கவனிக்காமல்
கட்டுமான பணியில்
கவனமாய் ஈடிபட்டிருக்கும்
"கண்ணியமான எட்டுக்கால் பூச்சி"

சின்ன சின்ன
சுனாமிகளைத் தரும் இவள்,
எங்களுக்கான நிலநடுக்கம் - என்றபடி
"நகரும் எறும்புகள்"

முடித்த பின்னர்தான்
ஞாபகத்திற்கு வருகிறது..
வழக்கம் போல எடுக்க
"மறந்த டவல்"

என் உடைதான்
அதன் சமாதியாம்
"குளித்தபின் வழிய மறுக்கும் துளி"

மாற்றிய உடையுடன்
கண்ணாடி முன் நான்..
அவசரக் குளியலின்
அர்த்தம் சொல்லி சிரிக்கும்,
"காதோர சோப்பு நுரை"

இப்படியாய் முடிகிறது
என்...
"கவிதைக் குளியல்"