Tuesday, July 20, 2010

..!!..

மௌனத்தில் உதிர்த்த
கண்ணீர்த்துளிகள்..
எழுப்பும் உளிச்சத்தம்
என்னுள்..!

செதுக்கப்படுகின்றேன்
நான்..
சீக்கிரம் சிற்பமாகிடுவேன்..!!

Tuesday, May 25, 2010

..!!..

ஊறி நனைந்தது மார்.
எங்கிருந்தோ வரும்
குழந்தையின் அழுகுரல்..!!

Saturday, May 15, 2010

எண்ணப்பறவை உதிர்த்த இறகுகள்..

-1-
பிடித்த வசனம்
தொடங்கயிருக்கும் வினாடிகளில்..
ஆரம்பித்தது விளம்பர இடைவேளை !!

-2-
நெரிசல்கள் இல்லா
அறையின் சுவற்றில்..
முட்டி மோதுகிறது தும்பி !!

-3-
குளித்துவிட்டு சிறகுலர்த்துகின்றன
சிட்டுக்கள்..
குடிப்பதற்கென வைக்கப்பட்ட
அகன்றவாய் பாத்திரத்தின்
விளிம்பில் நின்று !!

-4-
அழைப்பிதழ் கொடுத்து
வாராதே என்றாள்
காதலி !!

-5-
இருபுறமுமாய் கால்களிட்டு
நெஞ்சில் உறங்கும் குழந்தையென..
ஜன்னல் கம்பிகளில்
வாழ்த்தட்டைகள் !!

-6-
"லயிலு லோடு"
என்ற மழலை மொழி..
தண்டவாளத்திற்கான
குறுங்கவிதையானது !!

Friday, May 7, 2010

மழை நாளில்...

வெளியே மழை.
உள்ளே நான்.
இருவருக்குமிடையே
சிக்கித் தவிப்பதாய் உணர்த்தின..,
மூடாக்கதவருகே ஒ(ப)துங்கிய
ஈர ஜோடிச் சிட்டுக்குருவிகள்.

நெல்மணிகள் எடுக்கத்தான்
எத்தனித்தேன் - அவைகளோ
பறக்க எத்தனிக்கின்றன.
அமைதியாகின்றேன்.

விருந்தாளிகளைக்
கவனிக்காத
எனக்கு மட்டும் எதற்கு?..
கோப்பையில் தேநீர்
ஆறிப்போக விட்டுவிட்டேன்.

நிர்ச்சலனமாய்
நாங்கள்..
சலசலக்கிறது
மழை..

மூவருமாய் மழை
பார்த்தோம்.
இடையிடையே..,
நான் அவற்றையும்..
அவை என்னையும்..

இன்னுமாய்..,
ஒன்றையொன்று
அவை பார்த்துக்கொண்டது,
மழையை விட அழகாயிருந்தது எனக்கு..!!

Thursday, April 29, 2010

..!!..

இருளின் சந்துகளில்
முனுமுனுக்கும் ஊர்க்கிழவிகள்
விண்மீன்கள் - அதை
இமைக்காமல் செவிமடுத்த
முழுநிலா..குளிரொளிப் புகையாய்
பூமியிடம் கக்குகிறது கதைகளை!

உணரக் கிடைத்தவர்களுக்கு
ஒவ்வொரு கதைகள்..!

எனக்கோ..,
அரைத் தூக்கத்தில் புரண்டு
உன்னிடம் ஒண்டும்போது
பெற்ற...
ஒற்றை நெற்றி முத்தமென
உணர வாய்த்தது ஒரு கதை!!

Thursday, April 15, 2010

நிலா,நட்சத்திரங்கள்,இரவு.

-1-
என்டோமெட்ரியமோ
நீ?
மாதம் ஒருமுறை
உதிர்ந்து விடுகின்றாய்...!

-2-
நிலவரும்புகளா
நீங்கள்?

-3-
கிழிந்த இரவுப் போர்வை
வழியே..,பகல் எட்டிப் பார்க்கிறது
நிலவு ஓட்டையில்..
விண்மீன்கள் பொட்டரிப்பில்..!!

0

-1-
வெள்ளை
தீபம்..நிலா!
அதன் கீழ்
அகலா நிழல்..இரவு!
தீக்குச்சி உதிர்த்த
வெண்கங்குகள்..விண்மீன்கள்!

Wednesday, April 7, 2010

ஒவ்வொரு மனதிடமும்...

Happy world health day to all........!!
முன்குறிப்பு:வேலை பார்க்கும் போது, என்னோட ஒரு மாணவிக்கு மன நிலை சரியில்லாமல் போனபோது..,(நீ...லாம் சொல்லிக் கொடுத்தா இப்படித்தான் ஆகும்னு என் தம்பி கலாயிச்சதெல்லாம் அப்போதான்)
அவளுடன் psychiatric hospital - லில் ஒரு இரவும், இரு பகல்களும்.., தங்க வேண்டியிருந்தது.அப்போ,இரவெல்லாம் பிற நோயாளிகளின் உளறல்களும் என் மாணவியின் நடவடிக்கைகளும் என் உறக்கத்தைப்றித்தன...,பின்வரும் வரிகளைக் கொடுத்தன..!


மரிக்கும் முன்
சிரி!

மனம் பிழைக்க
அழு!

பிழையானாலும்
பேசு!

கேள்விகள்
கேளு!

பதில்கள்
தேடு!

உன் செயல்
யோசி!

வாழ்க்கையை
அழை!

தீயதை
மற!

குற்றம்
களை!

உரியதை
எடு!

மீதியைக்
கொடு!

கபடம்
விடு!

எண்ணம்
தெளி!

கிடைத்தவை
வாசி!

நல்லவை
காண்!

தீயவையும்
அறி!

விழு பின்
எழு!

கட்டளை
(கைக்)கொள்!

தோல்வியில்
கல்!

வண்ணத்துப் பூச்சியாய்
நிறம் கொள்!

வானவில்லாய்
வளை!

தும்பி போல்
தேன் காண்!

கொள்கை
கொள்!

உன் கருத்தை
சொல்!

வன்மை
உடை!

மென்மை
பேண்!

உள்ளம்
திற!

உணர்வுகள்
பிரி!

எல்லாம்
நேசி!

ஆபத்திலாவது
விழி!

செய்திகள்
சுவை!

கீதம்
இசை!

பிறர் இதயம்
அசை!

பறவையாய்
பற!

பூக்கள்
பார்!

நிலவையும்
நினை!

குழந்தைகள்
ரசி!

பசித்தாலும்
ருசி!

ருசிக்காவிட்டாலும்
புசி!

உழைத்தே
தேய்!

உண்மைக்குள்
தோய்!

உறவுகள்
இணை!

நம்பிக்கை
வளர்!

நிகழ்வுகள்
பகிர்!

இயற்கையோடு
புணர்!

மனிதம்
உணர்!

இன்னும் ஆயிரம்....

பின்.,
உன் உருவமில்லா மனம்
நோயாகாது..!
நிச்சயமாய்
பூரணமாகும்..!!

மனதைப் பிணமாக்காதே - அதற்கு..,
உயிரூட்டு!
உரமேற்று!

உள்ளத்தால்
உலகம் காண்..!

மனிதனாகவேவாவது
மரி....!!

Friday, April 2, 2010

..!!..

உப்புக் கல்லினுள் நிசப்த்தமாய்
உறைந்து படிகமானது..,
ஒரு கடலலையின் பேரிரைச்சல்..!

என்னுள்
என் காதல்..!!

Saturday, March 27, 2010

...நீ...

நீ கொடுத்த
பரிசுப் பொருட்களெல்லாம்
நீயாகிப் போயின எனக்கு..!!

Saturday, March 20, 2010

..2003 மார்ச் 20 அமெரிக்கா vs ஈராக்..

மனிதர்களோடு
மரித்துக் கொண்டிருக்கிறது
மனிதமும்..!

மனிதநேயத்திற்கு
வைக்கப் பட்டதால்.,
மரித்த மனிதர்களுக்கு
வைப்பதற்குப் பஞ்சம்
"மலர் வளையங்கள்"

வெடியின் சத்தத்தில்
நாட்டை விட்டு
வெளியேறியது "அமைதி"
தனக்கு அமைதியைத் தேடி!

சமாதானம்
சமாதியாகின்றது
சப்தமின்றி..!

உயிர் வழிந்தோடுகிறது
உறையாத..
இரத்தத்தோடு !

இரத்தத்தின் பிசுபிசுப்பில்
நிலத்தின் நிறம்மாறிக்
கொண்டிருக்கிறது
மனிதர்களின்
மனம் மாற வழியில்லை!!

உயிரின் உன்னதம்
உணராமல்.., மனிதன்
மனிதனை அழிக்கப்
போராடுகிறான்...!

ஆயுதங்களைஅழிக்க..
அழியாத போர்
ஆயுதங்களால்..!!
முரண்பாடான காரணங்களோடு
உடன்பாடேனோ?உண்மை புரியவில்லை...

அங்கே
காயங்களோடும்
கண்ணீரோடும் கதறும்
மனிதர்கள் பற்றிவாசித்த
செய்தித்துளிகள் என்னுள்
கண்ணீர்த் துளிகளாய்...!

அவைகள்..,
காற்றில் கலந்து
அவர்கள்
காயங்களுக்குமருந்தாகட்டும்!!

(பின்குறிப்பு: படிக்குப் போது எழுதினது..இப்போ டைரி-யை திருப்பும் போது கிடைச்சது.நினைவுகளில் வந்து போன,அந்த நாட்கள்.. உங்களின் பார்வைக்கும் ..

Thursday, March 11, 2010

குளியலறை கவிதைகள்...

நான் குளிக்க
காத்திருக்கும் கடல்..
"ஒரு வாளித் தண்ணீர்"

ஆடை களையும்
நேரத்தில் மீண்டும் அவசரமாய்
சரிபார்த்துக் கொள்ளும் மனம்
"பூட்டிய கதவை"

அங்கமெல்லாம் பரவியிருப்பது
உயிரா?..,உன்நினைவுகளா?..,
தெரியவில்லை,இப்போது அவைகளுடன்
"ஊற்றிய நீரும்"

தன்னை அழுக்காக்காமல்
என் அழுக்கை நீக்கும்
"ஒரு சிறு சோப்புத் துண்டு"

மேனியில் வழியும்
மேகங்கள்..
"சோப்பு நுரைகள்"

உலரும் நுரைக்குள்
உன் ஈரநினைவுகளுடன் நான்..,
எங்கோ கேட்கும்
"உனக்குப் பிடித்த பாடல்"

தேய்த்துக் குளிக்கையில்
விரல் பட்டதால் - தன்
தேகம் சிலிர்த்துச் சினுங்கும்
"கொலுசு முத்து"

ஆசையாய்ப் பார்க்கும்
மஞ்சளை..அவஸ்த்தையாய்ப்
பார்க்கும் நான்.
"அணியயிருக்கும் வெள்ளை சீருடை"

காற்றிக்கும் விடுதலை..
"தெறித்த துளிகள் பட்டு
உடையும் நீர்க் குமிழி"

என்னைக் கவனிக்காமல்
கட்டுமான பணியில்
கவனமாய் ஈடிபட்டிருக்கும்
"கண்ணியமான எட்டுக்கால் பூச்சி"

சின்ன சின்ன
சுனாமிகளைத் தரும் இவள்,
எங்களுக்கான நிலநடுக்கம் - என்றபடி
"நகரும் எறும்புகள்"

முடித்த பின்னர்தான்
ஞாபகத்திற்கு வருகிறது..
வழக்கம் போல எடுக்க
"மறந்த டவல்"

என் உடைதான்
அதன் சமாதியாம்
"குளித்தபின் வழிய மறுக்கும் துளி"

மாற்றிய உடையுடன்
கண்ணாடி முன் நான்..
அவசரக் குளியலின்
அர்த்தம் சொல்லி சிரிக்கும்,
"காதோர சோப்பு நுரை"

இப்படியாய் முடிகிறது
என்...
"கவிதைக் குளியல்"

Wednesday, January 6, 2010

நிமிடங்கள் சில...

ஆடையின் முக்கியத்துவம்
அறியாமல்..,
அலைந்திருந்த நிமிடங்கள்.

ஒவ்வொரு தேவைகளுக்கும்
பெற்றோரைத்
தேடிய நிமிடங்கள்.

விரல்களில் காயாத மருதாணி..
ஜன்னலில் காயும் நிலவு..,
நடு இரவில் நகரா நிமிடங்கள்.

சரியான நண்பனை
உணர்த்தும்
உயர்வான நிமிடங்கள்.

இரணங்களின் அர்த்தம்
தெரியாமல்..
இராகங்களில் மட்டுமே
புதைந்திருந்த நிமிடங்கள்.

ஜன்னலோரம்
பேசும் காற்றோடு
பேசாமல் பயணித்த நிமிடங்கள்.

நிறுத்தம் வந்தபிறகு
ஆரம்பிக்கும்..,பிடித்த பாடலின்
யுத்த நிமிடங்கள்.

கடந்து செல்லும்
யாரோ ஒருவர்..உன்னை நினைவுபடுத்த
திரும்பிப் பார்க்க நினைக்கும் மனதை
சமாதானப்படுத்திய நிமிடங்கள்.

உன் புன்னகைப்
பரிமாற்றத்திற்காய்
விழிகள் பசித்திருந்த
பவித்திர நிமிடங்கள்.

நீ பார்த்தும்-அதை
நான் பார்க்கக் கிடைக்காமல்
பறிபோன நிமிடங்கள்.

சில கட்டளைகளுக்கு
கனவுகளைக் கடன் கொடுத்த
கனமான நிமிடங்கள்.

விழி பேச நினைக்கும்-அதை
இமைகள் தடுக்கும்..
இதயம் பேச நினைக்கும்-அதை
இதழ்கள் தடுக்கும்..
மௌனத்தின் நிமிடங்கள்.

தூக்கத்தின் மடியில்
துக்கத்தால் விழித்திருந்த
துயர நிமிடங்கள்.

இழந்ததை அறியாமல்,
கிடைத்ததென நம்பிய
ஏமாற்றத்தின் நிமிடங்கள்.

திசைகளாய் நீளும்
ஆசைகளை
ஓசையின்றி..,மனம்
அசைபோட்ட நிமிடங்கள்.

பிணமென்று
ஒருவர் ஒதுங்க..
அப்பா என்று
ஒருவர் அணைக்க..
நிலையில்லா வாழ்வின்
நிலை சொல்லும் நிமிடங்கள்.

படிந்த பழைய நினைவுகளில்
படிகமாய் உறைந்திருந்த
நிமிடங்கள்.

எதற்காக நான்?
என்று குழம்பியும்
இதற்காகத்தான் நான்..,
என்று தெளிந்தும்
என்னை எனக்குப்
புரியவைத்த புதின நிமிடங்கள்.

உழைப்பின் வியர்வையில்
கரைந்த..
உன்னத நிமிடங்கள்.

சுகமாய்..
சுமையாய்..
சுவாரஸ்யமாய்..
எமனாய்..
எதார்த்தமாய்..
எத்தனையோ நிமிடங்கள்
நம்மைக் கடந்தாலும்..,

அன்னையின் கருவறையில்
கண்மூடி..,
உயிரினுள் உயிராய்
உறங்கிக் கிடந்த
இருளின் நிமிடங்கள்தான் எல்லாமும்..!-என
உணரக் கிடைத்த நிமிடங்களில்
நாம் இருந்தால்..,
"அவைதான் அதிஷ்டத்தின் நிமிடங்கள்..."

Sunday, January 3, 2010

...2010...

பழையன கழிதலும்
புதியன புகுதலும்...
புத்தாண்டும் போகிப் பண்டிகைதானோ?
ஆனால்..,புகையின்றி..!