Friday, October 31, 2014

...

உனக்கே உனக்கான 
ஒரு இரகசியம் 
உன்னிடம் மட்டுமே 
சொல்லவேண்டும்
உனக்கும் கேட்காதபடி.

Tuesday, October 14, 2014

நிதர்சனங்களின் காலம்

நான் நேசித்தவனுக்கு 
இரண்டாவதும் பெண்  பிள்ளையாம்.

என்னை நேசித்தவனுக்கு 
வேலை கிடைத்துவிட்டதாம்.

நிதமும் 
காலை 8 லிருந்து 8.30 குள் 
பார்க்க நேரிட்ட அவனை 
இப்போது அதே நேரத்தில் 
பள்ளிகூட வாசலில் அவன் பிள்ளையுடன்
நேரிட வைக்கிறது நேரம் 

ரேஷன் வரிசையில் 
எனக்கு முன்னால் காத்திருந்தவள்
குழாயடி அருகில் 
வழக்கமாய் காத்திருப்பவனின் மனைவியாம்.

தீபாவளி வாழ்த்து சொல்லியபடியே கொடுத்த
ஜவுளிப் பையை வாங்கி நகரும் போது கிழித்துக் கொடுத்தனுப்பிய
வாழ்த்து அட்டையை பத்திரபடுத்தியுள்ளான் 
சேதி சொன்ன தோழி வந்து போனாள்.

ஒருமுறையாவது பேச வேண்டும் 
என   சொல்லியனுப்பினவனிடம் 
மாதாமாதம் தொலைபேசி  
காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது

இன்றும் பேருந்து நிலையத்தின் 
மிகக் கடைசி இருக்கையில் 
அவனை பார்க்கும் பொழுதுகளில்
நான்தான் தவறாக புரிந்தேனோ 
என்றொரு புதிய இடறல்  

சில தவறுகளையும்
பிடிவாதமான மௌனங்களையும்  
நிராகரிப்புகளையும் 
நினைவுபடுத்தியபடியே நகரும் 
இந்தக் காலம்.