Monday, June 22, 2009

நீ..


உறக்கங்களை உதறி
உன்னையே உள்வாங்கிக்கொள்கிறேன்...

நீதானே கனவுகள்
கொடுக்கிறாய்!!

நீ..

அங்கு...
என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?
இங்கு...
என்னை எதுவுமே செய்யவிடாமல்!!

Saturday, June 20, 2009

உன் பிறந்தநாள்..

-1-
உன்னைப் பிரசவித்து...
தன்னை
கொண்டாடிக்கொள்ளத்
துவங்கிவிட்டது.., நீ
பிறந்த இந்நாள்!

-2-
உனக்கல்ல...
உன்னைப் பெற்ற
அன்றைய "நாளுக்கு"
வாழ்த்து!
பிற 364 நாட்களிடமிருந்தும்.

-3-
உனக்காக... நான்
தேர்ந்தெடுத்த - அந்தவொரு
வாழ்த்து அட்டையிடம்.,
தங்கள் வாழ்த்துகளை
சொல்லியனுப்பியிருந்தன...
அங்கிருந்த பிற
வாழ்த்தட்டைகளெல்லாம்!!

-4-
தேவதைகளெல்லாம்
வேகமாகவே தூங்கச்சென்றனர்
நாளை அதிகாலமே வந்து
உன்னை ஆசிர்வதிக்க வேண்டுமென்று!

-5-
உன் பிறந்தநாளன்று..,
மற்றவர்களுக்குத்தான்..
இனிப்பு!
எனக்கு..
நீ!

-6-
எனக்காக அவளா?
அவளுக்காக நானா?
என்னைப் போலவே
குழம்பியிருந்தன...
உன் பிறந்தநாள்
பரிசுப் பொருட்களும்!

-7-
உலகத்தில் நீ எங்கு சென்றாலென்ன?
வாழ்த்துகள் உரைப்பேன்
மறவாமல்.
உன் காதுக்கெட்டும்
தூரத்தில்தான் நான்!

-8-
உன் வீட்டுவாசலில்..,
உன்னை வாழ்த்த
ஒரு பூங்கொத்து
காத்துக்கொண்டிருக்கிறது
பூமியின்..
அத்தனைப் பூக்கள் சார்பாகவும்!

-9-
தவறுதலாய்...
மறந்துபோய்விட்ட
உன் பிறந்தநாளை..,
மீண்டும் தெரிந்துகொள்ள
தினமும் வாழ்த்து கூறியது
நினைவிற்கு வருகிறது..
இந்தப் பிறந்தநாளிலும்!!

-10-
என் பிறந்தநாள்
கொண்டாடப்பட வேண்டிய
விஷயம்தான்... - அது
உன் நினைவில்
இருக்கும்வரை! என
எப்பொழுதோ நீதான் கூறினாய்..

-11-
நம்...
அறிமுகத்திற்கு பின்
வந்த உன்
முதல் பிறந்தநாளில்..,
20 பரிசுப்பொருட்கள்
என்னிடமிருந்து!
பழைய 19 பிறந்தநாளுக்கும்
சேர்த்து!!

-12-
நான் இறந்து போனதை
உறுதிப்படுத்திக்கொள்!!
உனக்கு.. என்
பிறந்தநாள் வாழ்த்து
வராதபட்சத்தில்!!

-13-
என்னடி அத்தனை அவசரம் உனக்கு?
நான் அழைக்கும் முன்பே
என்னை அழைத்து
"வாழ்த்துடா.. "
நான் மறுபடியும்
பிறக்க வேண்டும் என்கிறாய்!!


Friday, June 12, 2009

மழை நாளில்....பேருந்துப் பயணம்..!!

நகரும் குடையாகிப் போனது
பேருந்து!

என்னவனின் மடியாகிப் போனது
இருக்கை!

அவன் ஆழ விழிகளாகிப் போனது
ஈரச் சதுர உலகம் காண்பிக்கும்
ஜன்னல்!

அவன் விரல்களின்
பதட்டமான தொடுகைகளாகிப் போனது
தெறிக்கும் சாரல்!

எனைத் தொடும் தூரத்தில்
அவன் சுவாசம் என்றாகிப் போனது
தென்றல்!

எங்களின் புரிந்து கொள்ளப்படாத
மௌனங்களாகிப் போனது
பின்னாகக் கடக்கும் காட்சிகள்!

தானாகவே வந்தமைந்த
அதிர்ஷ்டமாகிப் போனது
பிடித்தபாடல்!

பேருந்தினுள்...,
பறக்கும் நந்தவனமாகிப் போனது
மழைக்கு ஒதுங்கிய
வண்ணத்துப் பூச்சியின்
சிறகசைப்பு!

மழைக்கு...,
உயிருள்ள வாழ்த்துமடலாகிப் போனது
சிரிக்கும் குழந்தையின்
கைத்தட்டல்கள்!

அத்தனை சந்தோசத்திற்கும்
முற்று புள்ளியானது
நான் இறங்க வேண்டிய
நிறுத்தத்தின் வருகை!

இருப்பினும்...

வடியாத சந்தோசத்துடன்
இறங்கினேன்...
வடிந்துவிட்ட மழையில்
குளித்த பூமியின்
முகம் பார்க்க...

பார்த்ததோ..?

குளிரில் நடுங்கும்
அனாதைத் தாத்தா...
எரிமலையாகிப் போனது
ஈரமழை!!

Thursday, June 11, 2009

நீ..

என்னை வாசித்து
பின் ..
எனக்கே என்னைக்
கற்றும் கொடுத்தாய்..

உன்னிடம் கற்று
கொண்ட..
"நான்" என்னும் பகுதிகள்
எனக்குப் புதியவை..

நான்..

எனது பெயர்...
அவள்
இதழ்ப் புல்லாங்குழலில்
இன்னொரு முறை
வாசிக்கப்படட்டும்
என்பதற்காகவே ..,
முதல் அழைப்பிலேயே
திரும்பாதிருந்தேன் நான்!