Thursday, December 17, 2009

..!..

நான் நினைத்ததையே
நீயும் நினைத்து

நான் சொல்லும் முன்பே-நீ
நீயாகவே தெரிந்துகொண்டதால்தான்

மௌனமாய் நாம்..!!

Wednesday, December 9, 2009

...!...

அவள்
மருதாணிக் கொலுசின்
மௌனிப்பில்..,
நிசப்த்தமாய்ச் சிரிக்கிறது
ஏழ்மையின் அழகியல்..!!

Friday, December 4, 2009

உன் நினைவுகள்-6-

* *
விடைபெறும்
நிமிடங்கள்..,
விடைபெறா
உன் நினைவுகள்..!

* *
உதறவும்
முடியவில்லை
உள்வாங்கவும் முடியவில்லை
உன் நினைவுகள்..!

Thursday, November 26, 2009

அந்தி-1

இரவின் மடியில்
பகல் தலைசாய்த்தது..,ஆம்
பொழுது சாய்ந்துவிட்டது..!!

Monday, November 16, 2009

...!?...

உன் விழிகளில்
என் முகவரி..!!

நீதான்..,
இறைவன் எனக்கென
எழுதியனுப்பிய கடிதமோ..?

Thursday, November 12, 2009

தொடர்பதிவு-1

யாரும் திட்டாதிங்க...இன்னுமா இதுன்னு.., கஷ்டப்படாதீங்க:)
தாமதமான பதிவுக்கு மன்னியுங்கள் கவிதை(கள்) !!
a-z எழுதவில்லை அதற்கும் சேர்த்து மன்னியுங்கள்...!


ன்பிற்குரியோர் "அன்பில்லாதவர்களும் கூட"

தரவானது "மனிதம் மட்டுமே"

யல்பானது "மாற்றங்கள்"

ட்ட வேண்டியவற்றுள் ஒன்று "பிறரின் நம்பிக்கை"

ண்மையான
பொய் "நான் ரெம்ப நல்லவ"

ருக்குள் என்னைப் பற்றி "வாயாடி"

ப்போதும் வாயில் "பிடித்த பாடலின் வரிகள்"

தாவது ஒருநாள் தான் "அம்மாட்ட திட்டே வாங்காமல் கழியும்"

.................... :)"உற்சாகப் பொழுதுகளில் தானாய் உளறலில் வந்துவிடும் ஓர் எழுத்து"

வ்வொருவரிடமும் "ஒரு வியக்கத்தக்க விஷயம் இருக்கும்னு நான்
நம்புறேன்"

துதல் நன்று -அதனால, "எந்த குழந்தையின் அம்மாவிடம் பேசும்போதும் கண்டிப்பா படிக்க வைங்கன்னு சொல்லும் வழக்கம் உண்டு "

ஒள
வை மொழி.. "ஆறுவது சினம்"

.... "நல்ல படம்"

Monday, November 2, 2009

..!!..

தானாய் எதுவும்
தோன்றவில்லை..

யோசித்தும் கூட
முடியவில்லை..

எழுத நினைத்த நிகழ்வே..,
இன்றையக் கவிதையானது!!

Thursday, October 29, 2009

வாசகங்கள்...

-1-
"பயன்படுத்துங்கள் என்னை"
தவறாகப்
புரிந்துகொள்ளப்பட்டது..,
குப்பைத் தொட்டியில்
குழந்தை..!!

-2-
"விளம்பரம்
செய்யாதீர்கள்"- என
விளம்பரம் செய்திருந்தார்கள்..!!

-3-
"இங்கே
சிறுநீர் கழிக்காதீர்கள்"
என்பதற்கு பதிலாக..,
சுவற்றின் வெளிப்புறத்தில்
பதிக்கப்பட்டார்களோ,கடவுளார்கள்..??

-4-
"எச்சில் துப்பாதீர்"
வெற்றிலைக்கறைகளுக்கிடையே..!!

Saturday, October 24, 2009

...!!...

தன் வெளியில் தானாய்ச்
சிந்திய ஒளியின் துளிகள்..,
என் வீட்டின் முன்அறையிலும்.

தவிர்த்து.. தாழிட்டு..
உள்அறையில் உறங்கச் சென்றேன்.

கனவில் நிலா..!!

Wednesday, October 21, 2009

கவிதை முத்தங்கள்...

ஒரு முத்தம்
சாவு.

மறு முத்தம்
பிறப்பு.

ஜென்மங்கள் பல
கொடுக்கிறாய்..,
பிரம்மனோ நீ..!

Thursday, October 15, 2009

..!!..

நீ... என்றொரு
ஒற்றை ராகம் மட்டுமே
இசைக்கும்...,
என் உயிர்ப்புல்லாங்குழல்..!!

Monday, October 12, 2009

...?...

தொலைவில் தன் அலகுகளால்
தொட்டுக்கொண்டிருந்தன
ஒரு ஜோடிப் புறாக்கள்...
பொறாமை கொண்டாள்,
அவள் முதிர்கன்னி..!!

Friday, October 9, 2009

கவிதை முத்தங்கள்..

நாம் எங்கு துவங்கினாலும்
முடிந்து போவதென்னவோ..,
முத்தங்களில்தான்..!

நீ கொடுக்கும்
ஒவ்வொரு முத்தங்களிலும்
நான் (உள்)வாங்குவதென்னவோ..,
உன்னைத்தான்..!

Saturday, October 3, 2009

உன் நினைவுகள்-5-

உன் நினைவுக்குமிழியினுள்
அடைபட்டிருக்கும் காற்றுதான்
உனக்கான என் சுவாசம்...

Thursday, October 1, 2009

கவிதை முத்தங்கள்..

முதல் முத்தம்
கொள்ளி..

உயிருள்ளவரை நான்..,
நடமாடும் சிதை!!

Tuesday, September 29, 2009

கேள்வியும்..பதிலும்..!!

கவிதைகள் சுமந்தே
திரிகின்றாயே...!
பாரமாகவே இல்லையா
உனக்கு?-என்றேன்.

உன் காதலையே
சுமக்கின்றேன்...
கவிதைகள் என்ன???
எனும் பதில் மொழியால்,
மீண்டும் களவாடுகிறாய்!!

முன்னமே..,
உன்னிடம் தொலைந்து போன என்னை!!

Thursday, September 17, 2009

சில துளிகள்...

-1-
தவிர்க்க முடியவில்லை..,
செவியின் கவனம்
குவிகிறது பக்கத்துவீட்டில்!!
"ஒலிக்கும் பிடித்த பாடல்"

-2-
தேவைக்கும்
அதிகமாய்
உண்டுவிட்டாளாம்-வாந்தியெடுக்கும்
"பிச்சைக்காரி"

-3-
கூட்டணியுமில்லை..
சத்தமுமில்லை..
"ஒற்றை வளையல்"

-4-
இரசிப்பதை
நோக்கி
முன்னேறவேயில்லை.
குற்றம் காண்பதிலேயே..,
சிக்கிக் கொண்ட மனசு!!

-5-
கரையில்..
காயும் சீலைக்காக,
ஆத்தினுள் காத்திருக்கிறாள் அவள்!!
"குளியலின் பெயரில்"

-6-
பாட்டியின் ஆசைமுத்தம்
இனிக்கவில்லை பேரனுக்கு
"கன்னத்தில் வெற்றிலைக்கறை"

Friday, September 11, 2009

...??...

என் மனம்..,

என்னிடம் மறைத்து வைத்திருக்கும்
உண்மை...
நீ!!

உன்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கும்
பொய்...
நான்!!

Monday, September 7, 2009

உன் நினைவுகள்-4-

அழுத்தும் உன்நினைவுகளை
இறக்கிவைக்க நினைக்கும் போதெல்லாம்
நினைவிற்கு வருகிறது..,
எனக்கு மீண்டும்
உயிர்த்தெழத் தெரியாதென்பது!!

Tuesday, September 1, 2009

...நீ...

என்னுள் நிறைந்து
என் விழிகளில்
வழிகிறாய் நீ...!!

Saturday, August 29, 2009

அந்த நூல் அவனை வாசிக்குமா??

சத்தம் போடாதே மனமே..,
அவளைக் கண்டதும்.
இது நூலகம்!!

பல நேரங்களில்
நான் நூலகத்திற்கு செல்வது..,
அவளை வாசிப்பதற்காக மட்டுமே!!

எதற்காக..அவள்,
புருவங்கள் நெரித்தாள்?
விழிகள் விரித்தாள்?
குறுநகை கொண்டாள்?
எந்த வரிகளில் கரைந்து போனாள்?-என..,
எத்தனை சந்தேகங்கள் என்னுள்!!
"அவளைப் படித்த பின்"

வரிகளின் கரைகளில்
உருளும்.. அவள் விழிகளின்
கரம்பிடித்து உலவும்
என் மனமும்!!

ஆழ்ந்த கவனத்துடன்
நகர்ந்துகொண்டே இருக்கிறாள்..
நகர்த்தும் பக்கங்களுக்குள்.
நானோ..அவளினுள்!!

"அசையா ஓவியம்"
"இமைக்கும் சிற்பம்"
"தேவதை நீ
நூலகம் கோயில்"
"என்னிதய நூலகத்தில்
கவிதைத் தொகுப்பாய் நீ!"-என
அலங்கரிக்கிறேன் அவளை
என் கவிதைகளாலும்..
கனவுகளாலும்..
ஆனால்,அவளோ..
கலைந்த கூந்தல் சரிசெய்யும்
விரல்களின் அசைவில்..-என்
கனவுகள் கலைக்கிறாள்!!

அவள் புரட்டிய புத்தகங்களிலேயே
புதைந்து போகிறேன் நான்..
அவள் கைரேகைகள் தேடித்தேடி!!

தொடர்ந்தே இருந்தாலும்
தொலைவாகவே இருக்கிறேன்.
என்றாவது ஒருநாள்..
நேரம் ஒதுக்குவாளா அவள்..?
என் விழிகள் வாசிக்க!!

ஆம்!!

அந்த நூல்
அவனை வாசிக்குமா???

Wednesday, August 26, 2009

உன்னிடம்....

-1-
என்னிடம்..கூட இல்லை
உன்னிடம் மட்டும்தான்
நான் இப்படி!

-2-
எனக்கான ரகசியங்கள்..
உன்னிடம் இருக்கும்
என் நினைவுகள்!

-3-
உன்னைப் பார்த்த
சந்தோசத்தில்..
உன்னிடம் கூடப்
பேச மறக்கிறேன் நான்!

-4-
உனக்கே..உன்னிடம்
இல்லாத உரிமை
எனக்குண்டு!

-5-
உன்னிடமிருந்து
விலகும் முயற்சியின்..முடிவில்,
உன்னைத்தான் வந்தடைகிறேன்!

Friday, August 21, 2009

மூன்றும் காதலே..

-1-
களவு
என்பதால்
காதலும் பாவமே!!

-2-
கோபத்தின் உச்சத்தில்
அவர்கள்..

"போய்விடு" என்றான்
அவன்..

"ம்..போகிறேன்" என்றாள்
அவள்..

"இருவருமே பொய்
சொல்லுகிறார்கள்"
என்றது
காதல்..

-3-
காமம்
அவர்கள் வியர்த்திருந்தார்கள்
காதல் காற்று வாங்க சென்றது..

Wednesday, August 19, 2009

உனது பெயர்..

எனது புத்தகங்கள் எல்லாம்
அடையாளம் கண்டுகொள்ளப்படுகிறது..
உனது பெயராலே!

எனது உளறல்களும்
எனது கிறுக்கல்களும்
உனது பெயராகிப் போனது!

உன்பெயரின் எழுத்துக்கள்
சொல்லியே.. பூக்கள் பறிக்கிறேன்!

உன் பெயரின் முதல் எழுத்தாய்
என் ஒற்றை முடி வளைக்கிறேன்!!
அது கலையாமலிருக்க..அதில்-என்
நெற்றி பொட்டை ஒட்டுகிறேன்.

உன் பெயர் எழுதியே
படிந்த தூசி விலக்குகிறேன்!

சிதறிய வார்த்தைகள் சேர்த்து
உன்பெயர் புனைகிறேன்!

இனிப்பை நேசிக்கும்
குழந்தையின் மனம்போல
எனது பேனாவும், மையும்
உனது பெயரை நேசிக்க ஆரம்பித்துவிட்டன!
ஆம்..,
நீயே...எழுதியிருக்கமாட்டாய்
இத்தனைமுறை உன்பெயரை!

உமிழப்பட்ட மையெல்லாம்
உன் பெயர் சொல்லியே
உறைந்து போனது..,
உயிர் துறந்தது..!!

உன் பெயர் எழுதும்போது..
கரைந்த மை,
மோட்சம் பெற்றது!!
சிதறிய மை,
அதிஷ்டம் இழந்தது!!

உனது பெயர் எழுதிக்
கரைந்த இறந்தகாலம்
உன் பெயரை உள்வாங்கி
உயிர் பெற்றது.

எனது பெயர் முழுமைபெற்றது
உனது பெயரோடு
தன்னைச் சேர்த்தபோது!

நான் இறந்தபின்
பிறந்த குழந்தை,
உன்பெயர் சொல்லி அழைக்கப்பட்டால்...
என் ஆன்மா திரும்பிப் பார்க்கும்!!

Wednesday, August 12, 2009

வறுமை.....

சிசுவின் அடிவயிற்றில் நெருப்பு..,
அவள் முலைவழியே ரத்தம் !!

Monday, August 10, 2009

அம்மா போயிட்டு வாறேன்மா...

கடந்தகால வாழ்வை
அசைபோடும் பொக்கைவாய்த் தாத்தாவின்
நினைவில் கூட..
பள்ளிக் காலம் வந்து போகும்!!

நாமும் நினைவுத் தூசியைத்
தட்டிப்..பயணிப்போம்.,
நம் பள்ளிக் காலப் படிமங்களுக்குள்!

மாவுக் குச்சி..
பென்சில்..
பேனா..என வெவ்வேறு எழுதுகோல்கள்
நம்மைக் கிறுக்கிய காலம் அது!!

கடித்து பகிர்ந்த
தின்பண்டம்...
அதன் எச்சிலைப்
பெரிதுபடுத்தாது வாங்கிச் சுவைத்து
சிந்திய புன்னகைப் பூக்கள்...
கடனாய்கொடுத்த
மைத் துளிகள்-என்ற
சின்ன சின்ன
பரிமாற்றங்களில் தான்
நம் நட்பு வானம் விடிந்தது!!

பள்ளி மைதானத்தின்
விரிந்த வானத்தில்..
நிறைந்திருந்தது நம் உலகம்!

பள்ளி மணி ஓசை..
நட்ட மரக் கன்றுகள்..
முதல் சுற்றுலா..
முதல் தோழி..என
நாம் கடந்துவந்த
ஹைகூகளின் பட்டியல் நீளும்!

நடக்கவே தெரியாது நமக்கு
ஓடித்தான் நடந்தோம்..
உண்மை கூற வேண்டுமெனில்
பறந்தே திரிந்தோம்..
ஆம்!!
ஒரு கூட்டுப் பறவைகள் நாம்.
நமது சிறகுகள்..
சீருடையின் ஒரே வண்ணத்தால் மட்டுமே
அலங்கரிக்கப்பட்டிருந்தன..
இன.. மத..பேதமின்றி!!

விடுமுறை தினங்களிலும் கூட
பாடப் புத்தகங்களோடு பள்ளியில் நாம்..
சிரித்து விளையாடுவதற்காக!!

பழகிய விதிமுறைகள்..
திசைமாறிய குறிக்கோள்கள்..
நேராய் மாற்றிய தண்டனைகள்..
மதிக்க ஆரம்பித்த ஆசிரியர்கள்..
முயற்சிக்குப் பின்னும் தோல்விகள்..
தானாகவே வந்தமைந்த வெற்றிகள்..
இரசிக்க ஆரம்பித்த பாடல்கள்..
புரிய முயற்சித்த பாடங்கள்..,-எனத்
துவங்க ஆரம்பித்த போதுதான்
புரிந்தது..,
முடியவிருந்த பள்ளிக்காலத்தின் அருமை!!


Friday, August 7, 2009

...!!...

கடந்து செல்லும்
உனது ஊர்ப் பேருந்துடன்..
ஆசையாய்க் கைகோர்த்துக் கொள்ளும்.,
எனது மனமும்!

Wednesday, August 5, 2009

பலூன்காரன்...

சுவாசத்தை விற்கிறான்..,
சுவாசிப்பதற்காக!!

Monday, August 3, 2009

யாசகம்...

அதிகமாகவே வளர்ந்துவிட்ட
தலைமுடியுடன்.. நகங்களும்..

முதலாமத்தில்
எண்ணையின் "இல்லாமை"
இரண்டாமதில்
அழுக்கின் "நிறைவு"

இந்த சோகமான
முரண்பாடுகளுக்கிடையில்
ஆணா?
பெண்ணா?-என்ற
வினாக்களுக்கு இடமேயில்லை..,
அந்த நடை பயின்ற
மனிதப் பிறவி
புழுதியை மட்டுமே
ஆடையாகக் கொண்டதால்!!

வலதுகையால்..
தலையைச் சொறிந்து கொண்டே
நீட்டிய இடதுகையின்
உள்ளங்கையில்..
நான் வைத்த
பழைய ஒருரூபாய் நாணயம்
புதிய ஒளியைக் கொடுத்தது
அந்த இளம்பிறையின் முகத்தில்!!

"எந்தத் தேவையைப்
பூர்த்தி செய்துவிடும்
இந்த ஒற்றை நாணயம்.."என்ற
என் எண்ணக் குடைச்சலுடன்
இந்த நிகழ்வு
முற்று பெற்று கொண்டிருக்க....

கடந்து சென்று கொண்டே
என்னை நோக்கிய அந்தக்
குழந்தையின்..
விழுந்த பற்களுக்கு இடையே
எழுந்த புன்னகை
மீதமாய் என்னில்...

கொடுத்ததற்கும் மேலாகப்
பெற்றுக் கொண்ட நானோ..
இப்பொழுது..,
கடனாளியாக!!!

Friday, July 31, 2009

நீ..

விரும்பி வந்ததா?
விலகிச் சென்றதா?

தெரியவில்லை...,

இதில் ஏதோ ஒன்றுதான்
எனக்கான போதி!!

Monday, July 27, 2009

....???....

சந்திப்புகளும்... பிரிவுகளும்...
எனக்குத் தருவதென்னவோ
ஒன்றைத்தான்!

அது..,
கவிதை!!


Wednesday, July 22, 2009

நீ..

என் மனம் ஒரு
வெண் சங்கு!!

சும்மா இருந்ததை
நீதான் ஊதிக் கெடுத்தாய்.

அது எப்படி
விழிகளால் ஊதுகின்றாய்!?

உன் நினைவுகள்-3-

உன் நினைவு..
என் நனவின்
கனவு!!

Saturday, July 18, 2009

நீ..!?

தூக்கம் களவாடுபவையே..
அற்புதப் படைப்புகளாம்!!

நீயும் அப்படித்தானோ!?

Friday, July 17, 2009

நாம்..

நான் வேண்டாமெனக்கு..
இனி..,
நீயே வைத்துக்கொள்
என்னை!!

Thursday, July 16, 2009

ஏழ்மை!

அவள் கொடுத்த
வெள்ளை மோரில்..
இத்த கூரைத் தூசி!!

Wednesday, July 15, 2009

நாம்..

மணமக்களுக்கு..
பிணத்திற்கு..
இறைவனுக்கும் கூட..,

ஒரே மாலைதான்!!

நாம்தான் நம்மைக்
குழப்பிக் கொள்கிறோம்..,
மகிழ்ச்சி..
கவலை..
பணிவு..என!

எல்லாமே
நிகழ்வுகள்தான்!!

Monday, July 13, 2009

உன் நினைவுகள்-2-

கண்ணீர்...
உன்நினைவுகளின்
கரைசல்!

உதிரிப் பூக்கள்..

ழை..
-1-
ழைப்பின்றி
வரும்
தீயணைப்புப்படை!!
-2-
காற்று
மண்டலத்தின்
தூசு தட்டும்
ஈரத் துடைப்பான்!!

கண்ணீர்..
விழிகளுக்கும்
வியர்த்துவிட்டதோ?

முகமலர்ச்சி..
மனமகிழ்ச்சியின்
நேரடி ஒளிபரப்பு!!

வேண்டும்..
ஆசைகளை உறங்க வைக்க
ஒரு தாலாட்டு!!

பூக்கள்..
ஒரே நாளில்
ஒரு சாம்ராட்சியம்!

குழந்தைகள்..
ஒரே தேவனின்
பல பிரதிபலிப்பு!!

மரணம்..
வாழ்க்கை வைத்த
முற்றுப் புள்ளி!!

ஏழை..
பணத்தால்
கைவிடப்பட்டவன்!!

காளான்..
மழைக்குப் பின்
ஏன்னிந்தக் குடை?

கவிதை..
கருவைச் சுமக்கும்
தாய்மை!!

ஓவியம்..
தூரிகையின் பயணத்தால்
உருவான புண்ணியஸ்தலம்!!

போர்வை..
மூடிப் படுக்கும் போது
எனை மூழ்கடிக்கும்
சிந்தனைக் குடில்!!

மௌவல்..
மழலையின் சிரிப்பில்
அம்பலமான ரகசியம்!!

வண்ணத்துபூச்சி..
-1-
வண்ணங்களுக்கு என்று
சிறகு முளைத்தது?
-2-
நித்தமும் ஹோலி
உங்களுக்கு!!

என்ன செய்ய?

உன் வருகையைத் தின்றே
பசியாறிகொள்வேன் நான்!

புரியாமல்..,

உணவுடன் வரும் உன்னை
என்ன செய்வது??

Wednesday, July 8, 2009

என் எண்ணக்குடை விரிப்புகள்..

-1-
இமைக்குடை நீ பிடித்து
மழைவிழி தாழ்த்துகிறாய்...
நனைவெதென்னவோ நான்தான்!!

-2-
உன்
பாதம் நனைத்த
மழைத்துளியிடம் தோற்ற..,
குடையாகத்தான்
நான் உன்னிடம்!!

-3-
நிராகரித்தாய்
...
நனைவதற்கு ஆசைப்பட்ட
குடைக்கம்பியானது
என் காதல்!!

தாமதமாய்..,

ஏற்றுக்கொள்கிறாய்...
குடைக்காளான் விரித்த
நிழலாகிப் போனது
உன் காதல்!!

-4-
குடையுடன்
...
காத்திருக்கிறது
ஒரு காதல்!!
மழைக்காக..

வந்து விட்டதோ
வெயில்..

பத்திரமாகவே காதல்
குடைக்கு நன்றி!!

-5-
ஒரு
குடைக்குள்..,
நனையாமல்
இரு துளிகள்..
நீயும்!
நானும்!

Saturday, July 4, 2009

நீ..

என்னால் உணர முடிகிறது
என்னுள் நீ!
உன்னால் உணர முடிகிறதா?..
உன்னுள் நீ இல்லை என்பதை!!

Friday, July 3, 2009

உன் நினைவுகள்-1-

என் தனிமை
வேளையில்..,
உன் நினைவுகளே
துணை!

காதலர் தினம்..

உலகமே கொண்டாடும்
சில தினங்களைத் தவிர்த்து..
உன்னை மட்டுமே
கொண்டாடுவேன் நான்,
தினம்.. தினம்..!!

Monday, June 22, 2009

நீ..


உறக்கங்களை உதறி
உன்னையே உள்வாங்கிக்கொள்கிறேன்...

நீதானே கனவுகள்
கொடுக்கிறாய்!!

நீ..

அங்கு...
என்ன செய்து கொண்டிருக்கிறாய் நீ?
இங்கு...
என்னை எதுவுமே செய்யவிடாமல்!!

Saturday, June 20, 2009

உன் பிறந்தநாள்..

-1-
உன்னைப் பிரசவித்து...
தன்னை
கொண்டாடிக்கொள்ளத்
துவங்கிவிட்டது.., நீ
பிறந்த இந்நாள்!

-2-
உனக்கல்ல...
உன்னைப் பெற்ற
அன்றைய "நாளுக்கு"
வாழ்த்து!
பிற 364 நாட்களிடமிருந்தும்.

-3-
உனக்காக... நான்
தேர்ந்தெடுத்த - அந்தவொரு
வாழ்த்து அட்டையிடம்.,
தங்கள் வாழ்த்துகளை
சொல்லியனுப்பியிருந்தன...
அங்கிருந்த பிற
வாழ்த்தட்டைகளெல்லாம்!!

-4-
தேவதைகளெல்லாம்
வேகமாகவே தூங்கச்சென்றனர்
நாளை அதிகாலமே வந்து
உன்னை ஆசிர்வதிக்க வேண்டுமென்று!

-5-
உன் பிறந்தநாளன்று..,
மற்றவர்களுக்குத்தான்..
இனிப்பு!
எனக்கு..
நீ!

-6-
எனக்காக அவளா?
அவளுக்காக நானா?
என்னைப் போலவே
குழம்பியிருந்தன...
உன் பிறந்தநாள்
பரிசுப் பொருட்களும்!

-7-
உலகத்தில் நீ எங்கு சென்றாலென்ன?
வாழ்த்துகள் உரைப்பேன்
மறவாமல்.
உன் காதுக்கெட்டும்
தூரத்தில்தான் நான்!

-8-
உன் வீட்டுவாசலில்..,
உன்னை வாழ்த்த
ஒரு பூங்கொத்து
காத்துக்கொண்டிருக்கிறது
பூமியின்..
அத்தனைப் பூக்கள் சார்பாகவும்!

-9-
தவறுதலாய்...
மறந்துபோய்விட்ட
உன் பிறந்தநாளை..,
மீண்டும் தெரிந்துகொள்ள
தினமும் வாழ்த்து கூறியது
நினைவிற்கு வருகிறது..
இந்தப் பிறந்தநாளிலும்!!

-10-
என் பிறந்தநாள்
கொண்டாடப்பட வேண்டிய
விஷயம்தான்... - அது
உன் நினைவில்
இருக்கும்வரை! என
எப்பொழுதோ நீதான் கூறினாய்..

-11-
நம்...
அறிமுகத்திற்கு பின்
வந்த உன்
முதல் பிறந்தநாளில்..,
20 பரிசுப்பொருட்கள்
என்னிடமிருந்து!
பழைய 19 பிறந்தநாளுக்கும்
சேர்த்து!!

-12-
நான் இறந்து போனதை
உறுதிப்படுத்திக்கொள்!!
உனக்கு.. என்
பிறந்தநாள் வாழ்த்து
வராதபட்சத்தில்!!

-13-
என்னடி அத்தனை அவசரம் உனக்கு?
நான் அழைக்கும் முன்பே
என்னை அழைத்து
"வாழ்த்துடா.. "
நான் மறுபடியும்
பிறக்க வேண்டும் என்கிறாய்!!


Friday, June 12, 2009

மழை நாளில்....பேருந்துப் பயணம்..!!

நகரும் குடையாகிப் போனது
பேருந்து!

என்னவனின் மடியாகிப் போனது
இருக்கை!

அவன் ஆழ விழிகளாகிப் போனது
ஈரச் சதுர உலகம் காண்பிக்கும்
ஜன்னல்!

அவன் விரல்களின்
பதட்டமான தொடுகைகளாகிப் போனது
தெறிக்கும் சாரல்!

எனைத் தொடும் தூரத்தில்
அவன் சுவாசம் என்றாகிப் போனது
தென்றல்!

எங்களின் புரிந்து கொள்ளப்படாத
மௌனங்களாகிப் போனது
பின்னாகக் கடக்கும் காட்சிகள்!

தானாகவே வந்தமைந்த
அதிர்ஷ்டமாகிப் போனது
பிடித்தபாடல்!

பேருந்தினுள்...,
பறக்கும் நந்தவனமாகிப் போனது
மழைக்கு ஒதுங்கிய
வண்ணத்துப் பூச்சியின்
சிறகசைப்பு!

மழைக்கு...,
உயிருள்ள வாழ்த்துமடலாகிப் போனது
சிரிக்கும் குழந்தையின்
கைத்தட்டல்கள்!

அத்தனை சந்தோசத்திற்கும்
முற்று புள்ளியானது
நான் இறங்க வேண்டிய
நிறுத்தத்தின் வருகை!

இருப்பினும்...

வடியாத சந்தோசத்துடன்
இறங்கினேன்...
வடிந்துவிட்ட மழையில்
குளித்த பூமியின்
முகம் பார்க்க...

பார்த்ததோ..?

குளிரில் நடுங்கும்
அனாதைத் தாத்தா...
எரிமலையாகிப் போனது
ஈரமழை!!

Thursday, June 11, 2009

நீ..

என்னை வாசித்து
பின் ..
எனக்கே என்னைக்
கற்றும் கொடுத்தாய்..

உன்னிடம் கற்று
கொண்ட..
"நான்" என்னும் பகுதிகள்
எனக்குப் புதியவை..

நான்..

எனது பெயர்...
அவள்
இதழ்ப் புல்லாங்குழலில்
இன்னொரு முறை
வாசிக்கப்படட்டும்
என்பதற்காகவே ..,
முதல் அழைப்பிலேயே
திரும்பாதிருந்தேன் நான்!

Saturday, May 30, 2009

மயிலிறகு...

நம் சந்திப்புகள்
ஒவ்வொன்றும்
ஒரு மயிலிறகு ...

தோகைகள் பல
சேகரித்துவிட்டேன்...

புதிய மயிலிறகை
வைக்கும் வெற்றிட
ஏற்பாடுகளோடு!

Sunday, May 17, 2009

இவை கவிதைகள் அல்ல Confusions..

இப்பொழுதெல்லாம்..
உன் நினைவுகள்தான்
என் புதுக்கவிதைகள்.
முற்றுப்புள்ளிகளாய்...
கண்ணிர்த் துளிகள்!!

ஏனோ அழுகிறேன்..
ஏனோ ஏங்குகிறேன்..
உனக்காகவா?இல்லை..,
உன்னாலா?
தெரியவில்லை

உனக்குத் தெரியாது
ஆனால் - நான் உனக்கு
அடிமை!

என்னாலியன்ற அளவு
உன்னை நினைத்துவிட்டேன்.
ஆனால்..,
இன்னும் முடிக்கவில்லை

உன் வார்த்தைகளின்
எதிரொலி, இன்னும்
எனக்குள்..

உனக்குத் தெரியாமலேயே
உன்னிடம் தோற்றுக் கொண்டிருக்கும்
நான்..,"எனக்குப் புதிது"

இல்லாமை இனிமையாகிறது!

மழையில்
குடையில்லை..

பௌர்ணமியன்று
வீட்டிற்குள் அனுமதியில்லை..

மெழுகும் அதன் ஒளியும்
மின்சாரமில்லை..

படபடக்கும் பட்டாம்பூச்சி
பூவில் தேனில்லை..

நின்றால் மட்டுமே தெரியும் குழந்தை
பயணத்தில் உட்கார இடமில்லை..

கவிஞனின் பசிக்கு
உணவில்லை..

இமைக்காத பார்வை
நமக்குள் மொழியில்லை..

உன் நினைவுகளோடு நான்
என்னோடு நீயில்லை..

ஆம்!
"இல்லாமை
இனிமையாகிறது "

உன்னை நினைத்து உதறிய மைத்துளிகள் இவை..

இமைப் பொழுதையும்
விணாக்குவதில்லை
உன்னை நினைக்காமல்....

~~~~o~0~*~0~o~~~~

பாதுகாத்துக் கொள்கிறேன்
பரிசாகத் தா... உன்
இமை முடியினை..

~~~~o~0~*~0~o~~~~

"இல்லை" என்று சொல்ல
நினைத்து...
"ஆம்"- என்றேன் நீ
நிமிர்ந்து பார்த்ததினால்!

~~~~o~0~*~0~o~~~~

பசியாயிருக்கிறது
உன் வார்த்தைகளை மட்டும்
பரிமாறு...

~~~~o~0~*~0~o~~~~

பயணம் இனிமையாகிறது!
ஜன்னலருகில் இடம் கிடைத்தாலும்
உன்னருகில் இடம் கிடைத்தாலும்...

Saturday, May 16, 2009

சுகம்தான்...

உன்னிடம்
தோற்று போவதும்
சுகம்தான்...

உன்னிடம்
முட்டாள் ஆவதும்
சுகம்தான்...

உன்னால்
கடிந்துகொள்ளப்படுவதும்
சுகம்தான்...

உன் அறிவுரைகளைக்
கேட்டுக்கொண்டிருப்பதும்
சுகம்தான்...

உன் கட்டளைகளைக்
கடைப்பிடிப்பதும்
சுகம்தான்...

உன்னால்
திருத்தப்படுவதற்காய் செய்த
தவறுகளின் தண்டனையும்
சுகம்தான்...

உனக்காக...
என் ஆசைகள்
சிலவற்றை மறைப்பதும்
சுகம்தான்...

பிடிக்காது எனினும்
நீ செய்துவிட்டதால்
சகித்திருப்பதும்
சுகம்தான்...

தன்மானம் துறந்து
தவறு என் பக்கம்
இல்லையென்றாலும்
உன்னிடம்
மன்னிப்புக்கோருவதும்
சுகம்தான்...

நீ எனக்கானவன்!
என்பது
உண்மையாய் இருக்கும் வரை...
மட்டுமல்ல..,
"பொய்யாய்ப் போனாலும்"

நான் என்ன செய்ய?

வார்த்தைகளுக்குள்...
வாக்குவாதம்.,
உன்னைப் பற்றி எழுத
தன்னைப் பயன்படுத்த
வேண்டுமென்று!

வெள்ளைப் புடவை..

தன்னை வெறுத்து
ஒதுக்கும் சமுதாயத்திடம்
விதவையானவள் நாளெல்லாம்
"சமாதான முயற்சியில்"

மழை..

மேகங்களில் அடைபட்டிருந்த
தேகமற்ற பிணைக்கைதிகளுக்கு..,
தென்றலின் பேச்சு வார்த்தையால்
இன்று விடுதலையோ?

தாய்மை...

என்னை உன்னிடம்

முழுமையாகக் கொடுத்த பின்தான்

முழுமையடைந்தேன் நான்!

பிடிக்கும்..

என்னை நோக்கி நகர்த்தாத

உன் கருவிழியின்

பிடிவாதம் பிடிக்குமெனக்கு!

நீ மட்டும்..!

நகன்று கொண்டேயிருக்கும்
நதி அவர்கள்.
என் குவளைக்கான நீராய்...
நீ மட்டும்!

தொடரும் நீளமான
நிலம் அவர்கள்.
எனக்கான பூர்வீகத்தின்
ஆறடி நிலமாய்...
நீ மட்டும்!

பூமியை நிறைக்கும்
பூங்காற்று அவர்கள்.
என் உயிர் கட்டும்
சுவாசமாய் ...
நீ மட்டும்!

தொலைவாய் விரிந்த
வானம் அவர்கள்.
என் வீட்டின்
தென்னங்கீற்றின் பின்
ஒளிந்து எனைப் பார்க்கும்
ஒரு வரி வானமாய்...
நீ மட்டும்!

பற்றி எரியும்
தழல் அவர்கள்.
என் படுக்கை அறையின்
மெழுகின் சுடராய்...
நீ மட்டும்!

Thursday, May 14, 2009

எப்பொழுது..?

எனக்குப் பிடித்தவைகள்
எல்லாம் கொடுக்கிறாய்...
"உன்னை எப்பொழுது?"

நீ நேசித்தவைகள்
எல்லாம் கேட்கிறாய்...
"என்னை எப்பொழுது?"

எனக் கேட்டவளும்...
கொடுத்தவனும்...
தங்களுக்குள் புழுங்க..,

தனித்து விடப்பட்டிருந்தது
காதல்!

பயணம்...

நெரிசல்..

வியர்வை..

முகம் தெரியாதவர்களின்
ஸ்பரிசங்களின் சங்கடம்...

அடைத்த ஜன்னல்...

அதனூடே,
நான் பார்க்க...
உன் பெரிய கரங்களின்
சிறிய அசைப்பு.

அத்தனையும் மறந்தே போனது..

வந்துவிட்ட எனக்கான
நிறுத்தம் உட்பட!!!

Wednesday, May 13, 2009

அறியாமை...

இறுதி ஊர்வலத்தில்
இன்பமாய்ப் பயணித்தன
மலர் வளையங்கள்..
தனக்கும் அதே நிலையென
அறியாமல்!!

..!..

புலம்பல்களின் மத்தியில்
புன்னகை...
பிணத்தின் மேல்
மலர் வளையம்!!

Tuesday, May 12, 2009

நம்மை...

நம்மைப் பிரித்து
வைத்திருக்கும் தூரம்
பிழையாகிவிடுமா என்ன?
நாம் இருவரும்
சரியாகவே இருக்கையில் ....

நிச்சயதார்த்தம்...

இன்று...
கணவனாக
நிச்சயிக்கப்பட்ட
இவன்..,
என் வருங்காலக்
காதலன்!

Sunday, May 10, 2009

..!!..

பசியிலிருக்கும் தன் பிள்ளையை
நினைவிற்கொண்டு

பகலில் தன்னைப்
பரிமாறிகொண்டிருந்தாள்

அவள்...
"விலைமகள்"

ஹைக்கூ..

எழுந்து ஆரவாரமிட்டு
கைகள் தட்ட ஆசை.
ஆனால்,
ஏழ்மை தடுக்கிறது..
சட்டையின் கைக்குள்
கிழிசல்கள்!!

மௌனங்கள்

உன்னுடன் பேசுவதற்கான
என் தனிமை
நேரத் தயாரிப்புகளில்..,
வார்த்தைகளுக்கு
சுயம்வரம்
நடத்தினேன் நான்.
மௌனங்கள் கொடுத்து
தொலைந்தே போயின
வார்த்தைகள் எல்லாம்..!

..!?..

மௌனங்கள் கொடுக்கிறேன் நான்..
"உன் தூக்கம் கலையாமலிருக்க"
நீயோ வார்த்தைகள் கேட்கிறாய்..
உன் கனவுகள் கலையாமலிருக்க!!

Friday, May 1, 2009

நான் கடல்...

நான் கடல்...
எல்லோரும் நதிகள்..,
எவராலும் என்னை
நிரப்பமுடியாது.
ஆனால்
நீ இன்றி
வற்றி போவேன்...!

Monday, April 27, 2009

மௌனம்

வார்த்தைகளின்
வேலை நிறுத்தம்..!