Wednesday, December 3, 2014

:)

புரண்டு பழகி 
திரும்பிக் கொள்கிறாய் 

தவழ அறிந்து 
தூரம் செல்கிறாய் 

தாய்ப்பால் மறந்து 
வலிக்கச் செய்கிறாய் 

விரல்கள் விடுத்தது 
ஓடி நடக்கிறாய் 

ஊட்டும் வழமை மாற்றி 
நீயே முயல்கிறாய் 

இழை இழையாய் 
பிரிதல்களின் 
புரிதல்கள் கொடுத்து
வளர்கிறாய்  

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் raymond :)

Monday, November 24, 2014

நீ சார்ந்தவைகள்

-0-
உனக்கு வாழ்த்தனுப்பித் துவங்கும் போது 
உண்மையாகவே துவங்குகிறது
அந்த நிமிடம்
நாள்
வருடம் 

-0-
துளியும் இனி
நீ வேணாம் 
போதுமெனக்கு என்றொரு முடிவில்
இப்படியாக எழுதித்
தோற்றேன்  

நீ போதும் எனக்கு.

-0-
எப்போதாவது நேரிடவே செய்கிறது
மனம் தேடும் நிழல்
உன் சாளரத்தில் கிடைக்கும் நிஜம்.

-0-
என்னை முழுவதாய் உள்வாங்கிக் கொள்ளும்
நீளப் போர்வை
உன்னை நினைவுபடுத்தாத
வெது வெதுப்பைக் கொடுத்தால்
நலமாகும் இந்த இரவு.

-0-
கனவுகள் பெருஞ்சுமை
நீ என் கனவானதென்ன

-0-
குளிர் நீரோடையடி நீ.
சலசலக்கிறாய் 

Friday, November 7, 2014

..

ஒரு சிறகு 
ஒரு கூடு 
ஒரு வெளி

இழந்தது அறியாமல் 

அலைந்து வரும் 
ஒற்றை இறகுக்கு  

குழந்தையின் கையில் 
சேர்ந்தபோது 

ஒரு சிறகை 

ஒரு கூட்டை 
ஒரு வெளியை 
அப்பிள்ளைக்குக் கொடுத்ததும் தெரியாது.

(நன்றி :மித்திரன் சார் )

Friday, October 31, 2014

...

உனக்கே உனக்கான 
ஒரு இரகசியம் 
உன்னிடம் மட்டுமே 
சொல்லவேண்டும்
உனக்கும் கேட்காதபடி.

Tuesday, October 14, 2014

நிதர்சனங்களின் காலம்

நான் நேசித்தவனுக்கு 
இரண்டாவதும் பெண்  பிள்ளையாம்.

என்னை நேசித்தவனுக்கு 
வேலை கிடைத்துவிட்டதாம்.

நிதமும் 
காலை 8 லிருந்து 8.30 குள் 
பார்க்க நேரிட்ட அவனை 
இப்போது அதே நேரத்தில் 
பள்ளிகூட வாசலில் அவன் பிள்ளையுடன்
நேரிட வைக்கிறது நேரம் 

ரேஷன் வரிசையில் 
எனக்கு முன்னால் காத்திருந்தவள்
குழாயடி அருகில் 
வழக்கமாய் காத்திருப்பவனின் மனைவியாம்.

தீபாவளி வாழ்த்து சொல்லியபடியே கொடுத்த
ஜவுளிப் பையை வாங்கி நகரும் போது கிழித்துக் கொடுத்தனுப்பிய
வாழ்த்து அட்டையை பத்திரபடுத்தியுள்ளான் 
சேதி சொன்ன தோழி வந்து போனாள்.

ஒருமுறையாவது பேச வேண்டும் 
என   சொல்லியனுப்பினவனிடம் 
மாதாமாதம் தொலைபேசி  
காஸ் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டியுள்ளது

இன்றும் பேருந்து நிலையத்தின் 
மிகக் கடைசி இருக்கையில் 
அவனை பார்க்கும் பொழுதுகளில்
நான்தான் தவறாக புரிந்தேனோ 
என்றொரு புதிய இடறல்  

சில தவறுகளையும்
பிடிவாதமான மௌனங்களையும்  
நிராகரிப்புகளையும் 
நினைவுபடுத்தியபடியே நகரும் 
இந்தக் காலம்.

Tuesday, September 16, 2014

விளம்பரங்கள்

-0-
ம்மா..  எனக்கு
ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கலாமா
பவுடர்தான் வேணும்.

ங்கே.. ன்னு பார்த்தேன்.

ponds

-0-
ஹார்பிக் அப்பாஸ்
நம்ம வீட்டுக்கும் வருவாரா?

எதுக்குடா?

பாத்ரூம் கழுவ..

-0-
இந்த நாயிக்கும்
க்ளுகோவிட்டா கொடுத்தா
அவனை முந்திடும்.

-0-
அம்மாக்கு வயசாயிட்டா
சோறு கொடுப்பியா தங்கம்?

வயசாகுறதுன்னா ம்மா ?

முடில்லாம் போய்டும்..
பல்லெல்..

அப்படின்னா
பிருங்காவும் (இந்துலேகா மறந்துட்டு போல )
எர்வாமெடினும் வாங்கித் தரேன்மா.

-0-
ஒரு கிரீம் add  க்கு
அந்த மலையாள ஹீரோ
கிடார் வாசிக்கிறார்.அப்படியே விளம்பர ஹீரோயினும்
வாசிக்கிறார்.

பொம்மை கிடார்ல என் பையனும் join பண்ணிடுறான்.
tune முணுமுணுத்தபடி.

-0-
எனக்கு அந்த பிஸ்கட் வாங்கித் தாம்மா.

எந்த பிஸ்கட்?

ஒரு அக்கா பூ தச்சுகிட்டே சாபிடுவாங்கல்ல அது

-0-
ம்மா

ஜெம்ஸ் னா என்ன?

மிட்டாய்.தெரியும்ல உனக்கு.

இல்லம்மா , பேஸ்ட் add ல சொல்லுற ஜெம்ஸ்.

அது germs டா.கிருமிகள்.

கடிக்குமா..?

இல்லடா.அதுவந்து..

பல்லுல கடிக்கும்.உனக்குத்தான் தெரியல.

ஹ்ம்ம்..


-0-
அந்த பாப்பா
பிறந்தநாளுக்கு
யாரு பலூன் பறக்க விட்டாங்க?
யாரையுமே காணும்?

-0-
வெறும் குட்மார்னிங்  சொல்லாதம்மா.

குட் மார்னிங் beautiful சொல்லு. 

-0-
என்னடா சேனல்
மாத்திட?

இங்க விளம்பரம் முடிஞ்சுட்டுல 
-0-

:)

Thursday, August 21, 2014

மொழியறிதல்

-0-

ம்மா..
அது  CAPITAL LETTER
C யா?
இல்லாட்டி small letter
c யா ?

எதுடா?
எங்க இருக்கு?

அந்தா
மேல பாருங்கமா 

நிலா.

-0-

ம்மா
DISCOVERY CHANEL  ல்ல
D எதுக்கு தப்பா போட்டிருக்காங்க?

D - ல உலக உருண்டை சுத்திட்டு இருக்கு raymond.
அது creativity.தப்பில்ல.

எங்க மிஸ்லாம் இப்படில்லாம் போடமாட்டங்க.
நானும் போடமாட்டேன்.

-0-

ம்மா 
அது என்ன shape?

ஓ 
செங்கலா?
அது செவ்வகம்.

இதுவா (கையில் எடுத்து)

இது பாதி செங்கல்
சதுரம்.
நான் சொன்னது 
முழு செங்கல் டா .

அப்போ 
ஒரு செவ்வகம் ஒடஞ்சா 
ரெண்டு சதுரமா?

ங்கே ..

Thursday, August 7, 2014

..??..

நதி இல்லையென்றால் என்ன 
நதியின் வழியில் 
கூழாங்கல் 

ஏதோ சொல்கிறது 

உணர வாய்க்கிறது 
நதியை.

Thursday, July 24, 2014

RAYMOND ..

-1-
அடிக்காதடா வலிக்கும்
வலிக்கட்டும்(இது raymond )
கொட்டீடும்டா
கொட்டட்டும்(இது raymond )
பாவம்டா
பாவட்டும்  (இது raymond )

-2-
வேமா சாப்பிடு தங்கம் வேலை இருக்கு 
'ஆ' சொல்லு 

நான் 'ஊ' தான் சொல்லுவேன் 
ஆ போதும்மா
ஊ ... 

-3-
A B C D.. பார்த்து எழுதுறான் 
சில எழுத்துகளை அப்படியே தலைகீழா எழுதுறான்  
(நிலக்கண்ணடியிலவா  மாப்ள சொல்லிக் கொடுத்தாங்கன்னு தம்பி கேக்கும்போது எனக்கும் முதல்ல புரியல)
 :)

-4-
டார்ச் LIGHT னா அவ்வளோ பிடிக்குது 
வீட்டுக்குள்ள தலைகீழா கவுத்தி வச்சுட்டு 
நிலா ஒளிஞ்சு இருக்கும்மான்னு சொல்லுறான்.
ஒரு FULL MOON DAY க்கு நிலா காமிக்கும் போது வானத்துக்கு உள்ள யாரோ டார்ச் பிடிசுருக்காங்க.
எங்கம்மா  சார்ஜார்ல போடுவாங்க? - னு கேக்கும்போது நான் மக்கு ஆகிடுறேன் 

-5-
TRAIN, NORTH INDIA -ல வந்துட்டு இருக்கு.

கிடார் வச்சு அவர் பாடுவார்ல .. அந்த பாட்டை  தப்பு தப்பா  பாடிகிறாங்கன்னு  சொன்னான்.

புரியவே இல்ல எனக்கு.
அவர் கொண்டைகடலை விக்கிறார்டா.

நல்ல பாரேன்ம்மா..

சனா சனா சானா..(விக்கிறார் )

(அட ஆமா எந்திரன் SONG  )

:)

-6-
கார் வரை 
லாரி வரை 
யானை வரைங்க 
தண்ணிகுடம் வரைங்கம்மா 

முடிஞ்சவரைக்கும்  வரைஞ்சு கொடுப்பேன் 

நேத்து கிடார் வரைய சொல்லிக் கேட்டான் 
STRINGS லாம் அழியும் வரை விரல் வைத்து  சிலேட்டில் வாசித்தபடி 
டிங் டிங் டிங் ன்னு சொல்லிட்டே   உறங்கி போனான்.

அழகாதான் இருக்கு 

Wednesday, June 4, 2014

:)

எப்பவுமே water bottle இல்லாமல் வெளிய கிளம்புவதே இல்ல.

மழை பெய்யுதே, கொஞ்ச நேரத்துல போய்டலாம்,வெளிய வாங்கிக்கலாம், அது ஒரு சுமையா  எதுக்கு இப்போ தண்ணீர் எடுத்துட்டு இருக்கிற நீ? இத்தனை கேள்விகளையும் தாண்டி கண்டிப்பா ஒரு குட்டி பாட்டிலிலாவது தண்ணீர் எடுத்துகிறது வழக்கம்.

அண்ணா நகர்  to மாட்டுத்தாவணிக்கு மினிபஸ்ல போயிட்டு இருந்தேன்.

வண்டி கிளம்பும் போது ஓஓஓஓஓஓடி வந்து ஒரு குடும்பம் ஏறுச்சு.
அப்பா கையில் ரெண்டு குழந்தைங்க,வயித்தில் பிள்ளையுடன் அம்மா,ஒரு தாத்தா பாட்டின்னு வியர்த்து வதங்கி ஏறினாங்க.என் பக்கத்தில் இடம் இருந்துச்சு.
பிள்ளைங்க தண்ணீவேணும் தண்ணீவேணும் ஒரே அழுகை.பாவமா இருந்துச்சு.வயித்துக்குள்ள இருந்த குட்டி பாப்பாக்கும் தாகம் இருந்திருக்கும் அந்த அளவுக்கு வெயில் வெக்கை என்னோட bottle-i கொடுக்க வைத்தது.குழந்தைங்க உதடுகுவித்து உள்வாங்கி கன்னம் உப்பி ,சட்டை நனைத்து குடித்து  தாகம் தீர்வதின் சந்தோசம் பிள்ளைகளின் முகத்தில்.அப்படியே பாட்டில் ஒவ்வொருத்தர் கைக்கும் போயிட்டு வந்துச்சு.வாய் வைக்காமல் குடித்தாலும் அவர்களின்  சரி பிழையாகவே உணரப்பட்டது என்னால்.வைகை போல இப்போ  என் பாட்டில் empty -யா வந்துச்சு.

பிள்ளைங்க வாய் வச்சு குடிசிட்டாங்க,அதான்..ன்னு தன்னிலை விளக்கத்திற்கு அவர் முயலும்போது நடத்துநர் வந்தார் .மேலமடை போகுமா என்றபடியே சட்டை பையை துழாவிய அவர்  மேல நடத்துநர் சரேலென போகாதுயா இதுக்கா வேமா வந்து ஏறுனீங்க -ன்னு கோபப்பட்டார்.இல்ல சார் என் தண்ணிய  காலி பண்ணன்னு எனக்குள்ள சொல்லிட்டு இருக்கும் போது stop இல்லாத இடத்தில் குடும்பமா இறங்கிட்டாங்க.

அவர்களின் பொறுப்பின்மை வருத்தமா இருந்துச்சு.முதல்ல,
உன் மகனுக்கு ஒரு டம்ளர் எடுத்து  வச்சியான்னு கேட்க்கும் அம்மா ஞாபகத்தில் வந்து போனாங்க.ரெண்டாவதா,
இப்படித்தான் சிலர் நம்ம வாழ்க்கைக்குள்ள வர்றாங்க   அப்புறம் போய்டுறாங்க அவுங்கல்லாம் வரும் போது நம்மட்ட இருந்த முக்கியமான விஷயம் போகும் போது சுருட்டி வாரி எடுத்துட்டு போய்விடப்படுது -ன்னு ஒரு எண்ணம் வரும்போதே மேற்படி  எதையும் 
யோசிக்காமல் பிடித்த பாடலுடன் கைகோர்த்து கொண்டது மனம்.

...........................................................................

அவசரத்துக்கு கூட மாட்டுத்தாவணி bus stand ல எதுவும் வாங்கிடக் கூடாது அங்க இருக்கும் சிறுதொழில் வியாபாரிகள் மேல இரக்கமே படவும் கூடாது.இதெல்லாம் மதுரை கற்று கொடுத்த பாடங்கள்.
-1-

பூ எவ்வளவு.

நூறு பத்து ரூபா.

சரி,நூறு தாங்க.

......

இதுல அம்பது பூதாங்க இருக்கும்.

ஆமாங்க ,bus stand - ல 50 பூதான் 100 பூ. 

:(

-2-

மல்லிப்பூ எவ்வளவு ?

2000 வேணுமா 3000 வேணுமா 

நான் ஊருக்கு போறேங்க.உங்க பக்கத்துல கடைலாம் போடும் plan எனக்கு இல்லன்னு சொல்லணும் போல இருக்கும்.எல்லாத்தையும் அடக்கிட்டு 500 போதும்னு சொன்னால் அவுங்கட்ட  இருந்து வரும் சலிப்பான expression.வீட்டில் போய் அந்த பூவை வைக்கும்போதும் ஞாபகம் வரும்.

-3-

ஒரு எலுமிச்சம் பழச்சாறு வேணும்.எவ்வளவு?

15 ரூபா 

ம்ம் .. தாங்க என்றபடியே 20 ரூபாவை  கொடுத்தால் ஒரு fivestar சேர்த்து வைத்தார்.சாக்லட் வேணாம் சார்.

change இல்ல 

ஒரு ரூபாக்குதானடா இப்படில்லாம்  அரங்கேற்றுவீங்க.நாலு மடங்கு உங்க அட்டகாசம் கூடிட்டா.(வழக்கம் போல சொல்லல) argue செய்து பிறகு நான் ரெம்ப நேரம் துழாவி தேடி 5 ரூபா கொடுத்து கூலிங் குறைஞ்சபோன சாற்றை பருகியதெல்லாம் ஒரு கதை.

-4-

ஒரு tea.

ரெம்ப நேரம் சர்ர்ர்ர்ர்ர் சர்ர்ர்ர்ர் சர்ர்ர்ர்ர் 

எனக்கு சூடாவே இருக்கட்டும்னு சொல்லுறதை கேக்கவேயில்ல மாஸ்ட்டர்ர்ர்ர்ர்ர்   ஆத்து ஆத்துன்னு ...ஆத்திடாரு.

ரெம்ப நேரம் கழிச்சு தான் tea குடிச்சேன்.
6 ரூபாக்கு நுரைதான்..

-5-

popcorn விக்கிறவர் 
மாதுளை விக்கிறவர் 

திரும்ப திரும்ப 
வந்து வந்து 
வேணாம்னு 
சொல்ல சொல்ல 

ஒன்னு பத்து ரூபா 
ரெண்டு இருபது ரூபா 
மூணு முப்பது ரூபா 

ஆமாங்க 
நாலு நாப்பது ரூபா 
அஞ்சு ஐம்பது ரூபா 
எனக்கும் வாய்பாடு தெரியும்னு நான் சொல்லுற (கத்துற )அளவுக்கு ..

-6-

frnz கூட outing.

கையேந்திபவன்.

தோசை சாப்பிட்டு முடிஞ்சுட்டு.
போதும்னு எழும்போது 

அவித்து 
ஆடை அவிழ்த்து கொட்டிய ஆவிபறக்கும் இட்லி  மேல் ஒரு கவனம்.
ஆளுகொன்னு சாப்பிடலாமா என்று கேட்டுகொண்டிருக்கும் போதே 

இன்னைக்கு வியாபாரத்தில் முதல் தட்டுங்க..
ஒன்னுலாம் தர முடியாதுன்னு சொன்ன அந்த அம்மா இன்னும் என்னை என்னவோ  செய்தபடியே இருக்கிறாள்.
..............................................................................
இவுங்களையெல்லாம் குறை சொல்லவில்லை.அவரவர் நியாயம் அவரவர்க்கு.அறியாமல் நானும் கூட இதைவிட அதிகமாகவே யாரையாவது தொந்தரவு செய்திருக்க கூடும் என்ற எண்ணமே என்னை சகிக்க கற்றுக்கொள்ள வைக்கிறது.

வாழ்க!

Friday, May 2, 2014

மூன்றாம்பிறை

-0-
பிறைகுச்சிகள் சேர்த்து
நிலாக்கூடு கட்டும்
இரவுப்பறவை

-0-
அவள் கடித்துத்  துப்பிய 
நகத்தின் எச்சிலை 
நினைவுபடுத்தும் பிறையொளி 

-0-
உடைந்த பாத்திரம் 
ஒழுகும் இரவு 


Monday, April 21, 2014

..!!..

நீயில்லாத
இரவுக்குளம்

மிதக்கும் நிலாக் கல்
தவழ்ந்து தள்ளாடுகிறது

பிரிந்து விரியும்
மெல்லிய நீரலையில்
நட்சத்திர கூச்செறிப்புகள்
உதடு குவித்து
ஊதியது யார்.

(நன்றி: மித்திரன் சார்)


Tuesday, April 8, 2014

சில நீ-க்கள்

-0-
எல்லாவற்றையும் உனக்குள் 
ஒளித்துக் கொண்ட
இரவு நீ.

-0-
எதையுமே மறைக்காததைப்போல்  
ஏமாற்றும் பகலும் நீ. 

-0-
ஒளிர்வதும் 
அணைவதுமாய் இருக்கிறேன் 
இமைக்காதே நீ.


Thursday, March 13, 2014

-0-
இரு பிழைகளுக்கிடையே 
மாட்டிக் கொண்டது ஒரு சரி
இரு சரிகளுக்கிடையே 
சிக்கித் தவித்தது ஒரு பிழை

அவர்களும் 
காதலும்.

-0-
பிரபஞ்சத்தில் 
ஒரேயொரு சரியும்  
ஒரேயொரு பிழையும்  
மட்டுமே. 

இறப்பும் பிறப்பும் 
பிறப்பும் இறப்பும்.

குறிப்பு :
2009 ல் கிறுக்கியிருக்கேன் 
diary  பாக்கும் போது கிடைச்சது.

Tuesday, February 11, 2014

Raymond க்கு 3 வயசு முடிஞ்சுட்டு.தெளிவா பேசுறான் .சில மாதங்களுக்கு முன்பாகவே எழுத ஆரம்பிச்சுட்டான் .இப்போ கொஞ்சம் english க்கும் தமிழ்க்கும் வித்தியாசம் தெரியுது.நிறையா கேள்விகள், திணறடிக்கிறான்.:)

0
நாய் குட்டி பார்த்துட்டே சாப்பாடு நடந்திருக்கு.ஊட்டிவிட்டது என்னோட அப்பா.மாம்ப்பா-ன்னு கூப்பிடுவான்.
மாம்ப்பா  puppy க்கு  கை எங்க இருக்குன்னு கேட்டதும்,அப்பா.. raymond தங்கம் தான் இப்போ puppy ன்னு சொல்லி raymond ஐ 4 கால்ல நிக்க வச்சு உனக்கு இப்போ கை எங்க இருக்கு .. முன்னாடி(இது  raymond ) .அதேதான் puppy கும். so, முன்னாடி இருக்கும் ரெண்டு காலும்தான் puppy க்கு கைன்னு ஒரு பதில் சொல்லியாச்சு.அடுத்த கேள்வி,
அப்போ கோழிக்கு மாம்ப்பா- ..(இது  raymond )
(பல்ப்  வாங்கலையோ பல்பு )

0
சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைத்துவிட்டு தேய்க்கும் கட்டையை எடுக்க போயிருந்தேன்.வந்து பார்த்தால் raymond ,தன்னோட குட்டி விரலை அதில் எல்லா பக்கமும் குத்தி எடுத்திருந்தான் .பார்த்துட்டு நான்,எவ்வளோ கண்ணு .. சப்பாத்தி மாவு  முழிக்குதுன்னு சொன்னேன்.அவன் சொல்லுறான் ,ம்மா எல்லாம் அக்கன்னா ம்மா.(ஆயுத எழுத்து)தெரியலையா உனக்கு??
ரெம்ப பிடிச்சிருந்தது அது :)

0
நகம் வெட்டிக் கொண்டிருந்தேன்.இது பெருவிரல் கட்டை விரல்னும் சொல்லலாம்.இதுதான உயரம் கம்மி அதான், கட்டைவிரல், குண்டாவும் இருக்கா so பெருவிரல்னும் சொல்லலாம்.இப்படியே எனக்கு தெரிஞ்சதை சொல்லிகிட்டே வேலைய நடத்தினேன்.ம்மா , இந்த விரலை வச்சு சுண்டவே மாட்டோம். நீ சுண்டு விரல்ன்னு சொல்லுற. நீ  தப்பு தப்பா சொல்லுறன்னு  ஆள் காட்டி விரலைதான் அப்புடி சொல்லனும்னு ஒரே வாதம்,வேறென்ன பண்ண ,சுண்டு  அப்படினா சிறிய ன்னு எப்படி புரியவைக்கணு எனக்கும் தெரியல.அவன் போக்கில் விட்டு நகம்  வெட்டியாச்சு.

0
கதை பாட்டு லாம் சொல்லுறான்.
கொஞ்சம் கவனிக்கல.. bubble gum எடுத்து வாயில் போட்டு மென்னு முழுங்கிட்டான்.பயந்துட்டேன்.தங்கம் தொண்டையில ஒட்டிக்கும்ன்னு சொல்லிட்டு இருக்கேன் அப்போ கொக்கண்ணா வை கூப்பிடுவோம்னு பதில்.
கோழிக்குஞ்சை திருடி நரி தின்னதாம் .தொண்டையில் முள்ளு பட்டுகிட்டு ,கொக்கண்ணா தான் எடுத்துவிட்டங்க.எனக்கும் ஓட்டினாலும் கொக்கண்ணா  எடுக்கும்.கூப்பிடு. என்ன பண்ணுவேன் நான்..:)) 

0
raymond தொடர்ந்து ..
மாம்மை.., 
மாம்ப்பா bath room light -i  off பண்ணல,
மாமா துவட்டீட்டு துண்டை காய போடல,
அம்மா குழாயை நல்லாவே மூடல ,
ஜீவாத்தை.. ரசத்தை கொட்டீட்டாங்க. இப்படி எல்லாரையும் complaint  பண்ணுவான்.உடனே அம்மா., எல்லாருக்கும் குட்டி குட்டியா punishment கொடுப்பாங்க.அதுல அவனுக்கொரு சந்தோசம் .இருந்தாலும், என்னடா ஒரேவாக்குல complaint  பண்ணீட்டு இருக்குறானேன்னு பார்த்தால் , அவர்தான் class leader னு கேள்விப் பட்டேன் .அதான் காரணம்னு புரிஞ்சுது.:)

0
கரும்பு ரெம்ப பிடிச்சுருக்கு raymond க்கு. 
கரும்பு சாப்பிட்டால் brush செய்ததுக்கு சமம்,பல் அவ்வளோ சுத்தமாகும்னு பேசிட்டு இருந்தோம்.மறுநாள், raymond brush பண்ணாமலே காலைல பூரி சாப்பிட்டான்,என்னடான்னு கேட்டால் பூரியே  பல்லு விளக்கிடுசும்மா - ன்னு 
பதில்.

0
movie songs கூட சில நேரம் முனுமுனுப்பான் 

பாடல்  1: fy ..fy 
                   bababam.. 
                   fy ..fy 
                   bababam.

பாடல்  2: swai ..swai.. swai 
                   கலாச்சி  swai ...

இப்படி பாடிட்டு இருந்தான் raymond.
(மாப்ள ..நல்லா  மிக்ஸ் பண்ணுற, பெரிய 
குடிமகன்டா நீ . - இது தம்பி )
:)

இந்த மாதிரியான சின்ன சின்ன சந்தோஷங்களுடன் என் வாழ்க்கை பெரிய அழகை தக்கவைத்துக் கொள்கிறது .


நாய்க்குட்டி பொம்மை 
மான் குட்டி 
குட்டி சிவப்பு கார் 
நீல மீன்
மஞ்சள் வாத்து 
எல்லாவற்றுடன் நானும் 
காத்திருக்கிறேன் 
பள்ளிக்கூடம் போன உனக்காக.