Wednesday, January 6, 2010

நிமிடங்கள் சில...

ஆடையின் முக்கியத்துவம்
அறியாமல்..,
அலைந்திருந்த நிமிடங்கள்.

ஒவ்வொரு தேவைகளுக்கும்
பெற்றோரைத்
தேடிய நிமிடங்கள்.

விரல்களில் காயாத மருதாணி..
ஜன்னலில் காயும் நிலவு..,
நடு இரவில் நகரா நிமிடங்கள்.

சரியான நண்பனை
உணர்த்தும்
உயர்வான நிமிடங்கள்.

இரணங்களின் அர்த்தம்
தெரியாமல்..
இராகங்களில் மட்டுமே
புதைந்திருந்த நிமிடங்கள்.

ஜன்னலோரம்
பேசும் காற்றோடு
பேசாமல் பயணித்த நிமிடங்கள்.

நிறுத்தம் வந்தபிறகு
ஆரம்பிக்கும்..,பிடித்த பாடலின்
யுத்த நிமிடங்கள்.

கடந்து செல்லும்
யாரோ ஒருவர்..உன்னை நினைவுபடுத்த
திரும்பிப் பார்க்க நினைக்கும் மனதை
சமாதானப்படுத்திய நிமிடங்கள்.

உன் புன்னகைப்
பரிமாற்றத்திற்காய்
விழிகள் பசித்திருந்த
பவித்திர நிமிடங்கள்.

நீ பார்த்தும்-அதை
நான் பார்க்கக் கிடைக்காமல்
பறிபோன நிமிடங்கள்.

சில கட்டளைகளுக்கு
கனவுகளைக் கடன் கொடுத்த
கனமான நிமிடங்கள்.

விழி பேச நினைக்கும்-அதை
இமைகள் தடுக்கும்..
இதயம் பேச நினைக்கும்-அதை
இதழ்கள் தடுக்கும்..
மௌனத்தின் நிமிடங்கள்.

தூக்கத்தின் மடியில்
துக்கத்தால் விழித்திருந்த
துயர நிமிடங்கள்.

இழந்ததை அறியாமல்,
கிடைத்ததென நம்பிய
ஏமாற்றத்தின் நிமிடங்கள்.

திசைகளாய் நீளும்
ஆசைகளை
ஓசையின்றி..,மனம்
அசைபோட்ட நிமிடங்கள்.

பிணமென்று
ஒருவர் ஒதுங்க..
அப்பா என்று
ஒருவர் அணைக்க..
நிலையில்லா வாழ்வின்
நிலை சொல்லும் நிமிடங்கள்.

படிந்த பழைய நினைவுகளில்
படிகமாய் உறைந்திருந்த
நிமிடங்கள்.

எதற்காக நான்?
என்று குழம்பியும்
இதற்காகத்தான் நான்..,
என்று தெளிந்தும்
என்னை எனக்குப்
புரியவைத்த புதின நிமிடங்கள்.

உழைப்பின் வியர்வையில்
கரைந்த..
உன்னத நிமிடங்கள்.

சுகமாய்..
சுமையாய்..
சுவாரஸ்யமாய்..
எமனாய்..
எதார்த்தமாய்..
எத்தனையோ நிமிடங்கள்
நம்மைக் கடந்தாலும்..,

அன்னையின் கருவறையில்
கண்மூடி..,
உயிரினுள் உயிராய்
உறங்கிக் கிடந்த
இருளின் நிமிடங்கள்தான் எல்லாமும்..!-என
உணரக் கிடைத்த நிமிடங்களில்
நாம் இருந்தால்..,
"அவைதான் அதிஷ்டத்தின் நிமிடங்கள்..."

Sunday, January 3, 2010

...2010...

பழையன கழிதலும்
புதியன புகுதலும்...
புத்தாண்டும் போகிப் பண்டிகைதானோ?
ஆனால்..,புகையின்றி..!

Thursday, December 17, 2009

..!..

நான் நினைத்ததையே
நீயும் நினைத்து

நான் சொல்லும் முன்பே-நீ
நீயாகவே தெரிந்துகொண்டதால்தான்

மௌனமாய் நாம்..!!

Wednesday, December 9, 2009

...!...

அவள்
மருதாணிக் கொலுசின்
மௌனிப்பில்..,
நிசப்த்தமாய்ச் சிரிக்கிறது
ஏழ்மையின் அழகியல்..!!

Friday, December 4, 2009

உன் நினைவுகள்-6-

* *
விடைபெறும்
நிமிடங்கள்..,
விடைபெறா
உன் நினைவுகள்..!

* *
உதறவும்
முடியவில்லை
உள்வாங்கவும் முடியவில்லை
உன் நினைவுகள்..!

Thursday, November 26, 2009

அந்தி-1

இரவின் மடியில்
பகல் தலைசாய்த்தது..,ஆம்
பொழுது சாய்ந்துவிட்டது..!!

Monday, November 16, 2009

...!?...

உன் விழிகளில்
என் முகவரி..!!

நீதான்..,
இறைவன் எனக்கென
எழுதியனுப்பிய கடிதமோ..?